புலம்பெயர்ந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.
பிகார், ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு அதிகமான அளவில் வேலைக்காக வருகின்றனர். கட்டுமான தொழில், ஆடை உற்பத்தித் தொழிலில் தொடர்பாக வேலைகளிலும் ஈடுபட்டுவந்த இவர்கள், தற்போது உணவகங்கள், செக்யூரிட்டி பணி, பெட்ரோல் பங்க், முடி திருத்தகம், வணிக வளாகங்கள் என பலவித பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
இதேபோன்று, ஆரம்ப காலத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வேலை செய்து வந்த வெளி மாநிலத்தவர்கள், தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; சென்னை தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தலின்படி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொழிலாளர் துறையின் ஆய்வுக்கு உட்பட்ட கடைகள், நிறுவனம், உணவு நிறுவனம், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், முடி திருத்தகம், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், பீடி நிறுவனம், மருத்துவமனை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களிலும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இத்தகைய வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர்துறையின் https://labour.tn.gov.in/ism/என்ற வலைதளத்தில் அனைத்து நிறுவன வேலை அளிப்பவர்களும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“