திருச்சி மத்திய பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையில், பஞ்சப்பூர் அருகே சுமார் 400 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் அதில் உள்ள வசதிகள் என்னென்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
தென் மாவட்டங்களில் வரும் சரக்கு வாகனங்கள், பேருந்துகள், திருச்சியை கடந்து தான் செல்கின்றன. அந்த வகையில் திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் மிக முக்கியமான ஜங்ஷன் ஆக இருக்கிறது. இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து திருச்சி புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து திருச்சி பஞ்சப்பூரில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பஞ்சப்பூரில் ஏற்கனவே சரக்கு வாகன நிறுத்த முனையம், டைடல் பார்க், சோலார் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிநவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அமைக்கப்படுகிறது.
தற்போது கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் மீதமுள்ள பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தின் சில பகுதிகளில் ஏ.சி வசதி, சர்வீஸ் சென்டர், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதி, ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்து நிறுத்தம், பயணிகளுக்கான ஓய்விடம், தங்குமிடம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட இருக்கிறது.
மேலும் பயணிகளுக்கான காத்திருப்பு அறைக்கு அருகே கழிவறை வசதிகள், அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி மையங்கள், எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் கூரை பகுதிகளில் எல்.இ.டி விளக்குகள், மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்தியேகத் தடங்கள், புல்வெளி பரப்புகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சென்னை கிளாம்பாக்கத்தில் தான் இது போன்ற அதிநவீன வசதிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலும் இதேபோல பேருந்து நிலையம் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அங்கு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து கூடுதலாக அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து விரைவில் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்