பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
கடந்த 13-ம் தேதி 21 தமிழர்கள் உட்பட 212 பேர் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் இருந்து 14 பேர் சென்னைக்கும், 7 பேர் கோவைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் இஸ்ரேலில் இருந்து நேற்று அதிகாலை 235 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர். பின்னர் 2 குழந்தைகள், 9 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் இரு விமானங்களில் டெல்லியில் இருந்து சென்னைக்கும், 12 பேர் கோவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல அரசு தரப்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சென்னைக்கு வந்த 16 பேரை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அயலகத் தமிழர் நலத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இஸ்ரேலில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய திருச்சி மாணவர்கள் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி வந்தனர். அவர்களை திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயிலும் திருச்சி கருமண்டபம் திருநகரை சேர்ந்த பழனியப்பன் (24) என்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவன், உறையூரை சேர்ந்த குருச்சரண் (29) என்ற ஆராய்ச்சி படிப்பு மாணவர் ஆகியோர் இஸ்ரேலில் இருந்து தங்களின் சொந்த ஊரான திருச்சிக்கு பத்தி்ரமாக திரும்பியுள்ளனர்.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் வந்த அவர்களை, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். இஸ்ரேலில் போர்த்தாக்குதல் நடைபெற்று வருகிறது, ஆபத்தான நிலையில் இருந்த நாங்கள் மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் இந்தியா திரும்பி உள்ளோம். போர் முடிந்தவுடன் படிப்பிற்காக மீண்டும் இஸ்ரேல் செல்வோம் எனக் கூறினர்.
முன்னதாக, இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இந்தியர்கள் தனி விமானத்தில் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன் தினம் 212 இந்தியர்கள் அடங்கிய முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது. இதையடுத்து, 235 இந்தியர்களை அழைத்து கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியாவுக்கு வந்தது. இந்நிலையில், 274 இந்தியர்கள் அடங்கிய 4-வது விமானம் இஸ்ரேலில் இருந்து டில்லி விமான நிலையத்திற்கு இன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை மத்திய அமைச்சர் வி.கே. சிங் வரவேற்று அவர்களை தத்தம் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சிகளை செய்துக்கொண்டிருக்கின்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.