scorecardresearch

20 மாதங்களில் 20 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தம்; முதியோர், விதவைகள் அதிர்ச்சி

2021-ல் திமுக ஆட்சி அமைந்தபிறகு அதிமுக ஆட்சி காலத்தில் தகுதியற்றவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக எழுந்தப் புகாரில் விசாரணை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

trichy
Pension suspension for 20 thousand people

தமிழக அரசின் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுதிறனாளிகள் என பல்வேறு திட்டங்களின் கீழ் தகுதியுள்ளவர்களுக்கு மாதம் மாதம் ரூ.1,000, மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகளுக்கு ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் தேசிய திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு தனது சார்பில் பங்களிப்பு நல்குகிறது.

இதில் 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தகுதியில்லாதவர்கள் எனக்கூறி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோரை கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே சிலருக்கு மட்டும் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது..

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இதுகுறித்த தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதன்படி கடந்த 20 மாதங்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருக்கின்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்த முழு விபரம் பின் வருமாறு; திருச்சி மாவட்டத்தில் தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 36 ஆயிரத்து 813 பேரும், தேசிய மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் 546 பேரும், தேசிய விதவைகள் ஓய்வூதியத்திட்டத்தில் 22 ஆயிரத்து 616 பேரும், மாற்றுதிறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தில் 19 ஆயிரத்து 459 பேரும் மற்ற ஓய்வூதியதித் திட்டங்களிலும் சேர்த்து சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 774 பேர் மாதா மாதம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இதில் 2021-ல் திமுக ஆட்சி அமைந்தபிறகு அதிமுக ஆட்சி காலத்தில் தகுதியற்றவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக எழுந்தப் புகாரில் விசாரணை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

 திருச்சி மாவட்டத்தில் 2021-ஜூன் 1-ம் தேதி முதல் 2023-பிப்ரவரி 28-ம் தேதி வரை தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வந்தவர்களில் 10 ஆயிரத்து 199 பேருக்கும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை பெற்று வந்த 5 ஆயிரத்து 346 பேரும், அனைத்து ஓய்வூதிய மற்றும் உதவித்தொகை திட்டங்களையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் சுமார் 19 ஆயிரத்து 869 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தநிலையில், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோரை விசாரித்து மீண்டும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட 19 ஆயிரத்து 869 பேரில் 2 ஆயிரத்து 541 பேருக்கு ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்பட்டது.

அதேசமயம், இதே காலகட்டத்தில் திமுக ஆட்சியில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்த 20 மாதங்களில் 18 ஆயிரத்து 784 பேருக்கு புதிதாக ஓய்வூதியத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க திமுகவினரால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தகுதியில்லாதவர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், மீண்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இணையாக புதிய நபர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

இந்நிலையில், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத்துறைகள் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை தொடர்பான மனுக்கள் மீது அதிகாரிகள் சட்ட விதிமுறைகளோடும், மனிதாபிமானத்தோடும் பரிசீலிக்க வேண்டும்.

முதியோர்கள், விதவைகள், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டோரை உதவித்தொகைக்காக அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy pension suspension for 20 thousand people in 20 months