தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிர்க்கொள்ளி நோயான டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த காய்ச்சல் கொசுக்கடி மூலம் மக்களுக்கு பரவி வருகின்றது. திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும், காய்ச்சலுக்கு திருச்சியில் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்ததாவது; திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் 500 சுகாதார பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சலை குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் கொசு தொல்லை இல்லாமல் வைத்திருந்தால் டெங்குவை ஒழிப்பது எளிதானது என்றார். திருச்சி மாநகரை பொருத்தமட்டில் டெங்கு பாதிப்பு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.
இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி (வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“