திருவெறும்பூர் தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள், திருச்சி மாநகராட்சியில் சில பகுதிகள் மற்றும் கூத்தைப்பார் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வீடு மனைகள் வாங்க விற்க வக்பு வாரியத்தால் தடை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எனவே, உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 20 கிராம ஊராட்சிகள், துவாக்குடி நகராட்சி, கூத்தப்பார் பேருராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சியில் சில வார்டுகளும் அடங்கும். இந்நிலையில் கூத்தைப்பார் பேரூராட்சியில் சில பகுதிகளும் மாநகராட்சி எல்லையில் உள்ள பாப்பாகுறிச்சி காட்டூர், எல்லக்குடி, திருவெறும்பூரில் சில பகுதிகளும் ஊராட்சிகளில் அரசன்குடி, வேங்கூர், கிளியூர், நவல்பட்டு, சூரியூர், கீழக்குறிச்சி, கும்பக்குடி, இலந்தைபட்டி ஆகிய பகுதிகளில் விரிவாக்கப்பட்ட பகுதிகளை தவிர மீதம் உள்ள பகுதிகள் நூற்றாண்டு காலமாக மக்கள் வசித்து வரும் பகுதிகளாகும்.
இதையும் படியுங்கள்: எஸ்.டி பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இப்பகுதிகள் தற்போது வக்பு போர்டுக்கு சொந்தமானவை எனக்கூறி இப்பகுதிகளில் வீடு மனைகள் வாங்க விற்க திருவெறும்பூர் பத்திரப்பதிவு அலுவலகம் திடீர் தடை விதித்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது சொத்துக்களை விற்கவோ வாங்கவோ முடியாமல் தவித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு தேடித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது குடும்ப மற்றும் பல்வேறு தேவைகளுக்கு தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய சொத்துக்களை விற்க முடியாமல் பெரும் அவதியில் உள்ளனர். இப்பிரச்சனை திருவெறும்பூர் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil