திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கூகூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அள்ளப்படும் மணல் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மண் சாலை வழியாக உத்தமர்சீலி கொண்டு வரப்பட்டு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கு மறைமுகமாக கொண்டு செல்லப்படுகின்றது.
இதனால் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் உள்ள விவசாயிகளின் நீராதாரம் பாதிக்கப்படுவதாகவும், மணல் சுரண்டலால் அருகில் உள்ள கல்லணைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகின்றது.
ஏற்கனவே குவாரிகள் அமைத்து மணல் அள்ளியதன் விளைவாக இரண்டு வருடத்திற்கு முன்பு முக்கொம்பு கொள்ளிடம், மேலணை பாலமும், திருவானைக்கோவில் சமயபுரம் பகுதியை இணைக்கும் கொள்ளிடம் பாலமும், மண் அரிப்பால் வலுவிழந்து விழுந்துள்ளது. கூகூர் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த மணல் குவாரிக்கும், கல்லணை நீர்தேக்க அணைக்கும் நீர் வழித்தடம் வடகிழக்கே 2 கி.மீ. தூரமே உள்ளது.
எனவே மழைக்காலங்களில் மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே நமது வரலாற்றுச் சின்னமான கரிகாலச்சோழனால் கட்டப்பட்ட கல்லணை நீர்தேக்க அணையை ஆபத்திலிருந்து பாதுகாக்க தமிழக அரசாங்கம் மணல் குவாரிகளை நிறுத்தி அணையை காத்து கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என அப்பகுதியினர் நெடுங்காலமாகவே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தமர்சீலி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த மணல்குவாரியால் உத்தமர்சீலி அழிந்துவிடும் எனச்சொல்லி காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது தற்போது வைரலாகியிருக்கின்றது. இந்த வீடியோவில் பேசும் விஜயகுமார், லால்குடி வட்டம் கூகூர் கிராமத்தில் உள்ள மணல் குவாரியிலிருந்து மணல் எடுத்து உத்தமர்சீலிக்கு கொண்டு வருவதாகவும், உத்தமர்சீலி ஒரு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் தான் எனச்சொன்ன நிலையில் இப்போது உத்தமர்சீலி ஸ்டார்ட்டிங் பாயிண்ட் அருகிலேயே ஆற்றுக்குள் ஆழமான நிலையில் தோண்டி மணலை வறண்டி எடுத்துக்கொண்டிருக்கின்றனர். உத்தமர்சீலிக்கு இது பேராபத்தை உருவாக்கும்.
உத்தமர்சீலி அருகே தடுப்பணை கேட்டு நீதிமன்றத்தை நாங்கள் நாடியபோது உத்தமர்சீலி பாதுகாக்கப்பட்ட பகுதி அங்கே தடுப்பணைக்கு வாய்ப்பில்லை என செல்லப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட உத்தமர்சீலி பகுதி இப்போது அழியப்பட்ட பகுதியாக மாறிக்கொண்டிருக்கின்றது. உத்தமர்சீலி பகுதி கொள்ளிடம் ஆற்றில் சுமார் 5-க்கும் மேற்பட்ட கிட்டாச்சி வாகனத்தைக்கொண்டு இரவு பகல் பாராது மணலை சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியருக்கும், பொதுப்பணித்துறைக்கும், போலீஸ்க்கும் தகவல் கொடுத்தும் எந்தவித ப்ரயோஜனமும் இல்லைங்க. அதனால தமிழக முதல்வர் இந்த விசயத்தில் தலையிட்டு மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் சூழலை தடுத்து நிறுத்தி நிரந்தரமாக மணல் குவாரிகளை மூடிட வேண்டும் என உத்தமர்சீலி பொதுமக்கள் சார்பாக முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன் என விஜயகுமார் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil