தீபாவளி பண்டிகை சமயங்களில் பல்வேறு பகுதிகளில் சீட் பிடிக்கும் பிரமுகர்கள் திடீரென காணாமல் போவதுபோல் தமிழகத்தின் மிக முக்கியமான பகுதிகளில் நகைக்கடை நடத்தி வந்த பிரபல ஜுவல்லர்ஸ்ஸின் உரிமையாளர்கள் காணாமல் போனதால் சென்னை, திருச்சி, நாகர்கோவில், மதுரை, ஈரோடு, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள அந்த ஜுவல்லர்ஸ் கடை முன்பு வாடிக்கையாளர்கள் கண்ணீர் மல்க கதறி வருகின்றனர்.
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் பிரபல ஜுவல்லரி கடை இயங்கி வந்தது. இக்கடையில் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த விளம்பரத்தை நம்பி, இந்தக்கடையில் மாதாந்திர சேமிப்பு மற்றும் தங்கத்தின் மீது முதலீடு என திருச்சியில் உள்ள பிரபல செல்வந்தர்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்தனர்.
அதாவது, மாதம் தோறும் ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ஆயிரம் என முதலீடு செய்பவர்களுக்கு கண்கவர் பரிசுகளும், 10 மாத முடிவில் ஆரம்ப காலத்தில் கட்டிய தொகைக்கு தங்கமும், கூடுதல் வட்டிக்கு தங்கம் என கவர்ச்சிகளை அள்ளிக்கொடுத்து பொதுமக்களிடம் இருந்து பல கோடிகளை வசூலித்திருக்கின்றனர். கடை திறந்து ஒரு வருடம் முழுமையாக முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை கொடுத்தவர்கள் சில மாதங்களாக தங்கத்தை கொடுக்கவில்லை, வட்டிக்கான காசோலைகளும் வங்கியில் இருந்து திரும்பி வந்திருக்கின்றன எனத் தெரிகின்றது.
இந்தநிலையில், திருச்சியில் உள்ள கடையை தவிர ஏனைய ஊர்களில் இருந்த அந்த நிறுவனத்தின் நகைக்கடைகள் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் முதலீடு செய்தவர்கள் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் இயங்கி வந்த ஜுவல்லரிக்கு சென்று கட்டிய தொகையையாவது கொடுங்கள் எனக்கேட்டிருக்கின்றனர். ஓரிரு வாரத்தில் அனைத்தும் சரியாகிவிடும் எனக்கூறிய ஊழியர்கள் இன்று காலை முதல் கடையை இழுத்து மூடிவிட்டனர்.
இதனால் பதற்றமான வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் ஜுவல்லரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உறுதியளிப்பை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த பிரபல ஜுவல்லரி மூடப்பட்டதால் அதில் முதலீடு செய்த பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து காவல் நிலையங்களில் புகார் கொடுக்க முற்பட்டு வருகின்றனர்.
தீபாவளி நேரத்தில் தங்க நகைக்கடை திடீரென இழுத்து மூடப்பட்டதால் அதில் முதலீடு செய்தவர்கள் என்னசெய்வது எனத் தெரியாமல் கதறி வருவது பெரும் வேதனைக்குரியதாக இருக்கின்றது. போலீஸார் எவ்வளவோ முறை கவர்ச்சிகளை நம்பி முதலீடு செய்யாதீர்கள் எனச் சொல்லியும் பொதுமக்கள் தாமாகவே சென்று விழுந்து எழ முடியாமல் தற்போது தவிப்பது பெருத்த வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.
முன்னதாக, கடந்த 2020-ல் இந்த நகைக்கடை உரிமையாளர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு தங்களது கடையில் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. இந்த நாட்களில் தங்கத்தின் மார்க்கெட் விலையை மட்டும் செலுத்தி நகைகளை வாங்கலாம். ரூ.500, 1000, 2,000, 3,000, 5,000, 10,000 நகை சீட்டு உள்ளது. இது 11 மாத நகை சேமிப்பு திட்டமாகும். 2 மாத தவணையை நிர்வாகமே செலுத்திவிடும் என விளம்பரப்படுத்தி பல கோடிகளை சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“