க.சண்முகவடிவேல்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சதய விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தர பாண்டியன், கதிரவன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கோட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ஓபிஸ் அணி ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குப.கிருஷ்ணன் மற்றும் மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, முத்தரையர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் வாயில் முன்னதாக போலீசார் இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அப்போது திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினரின் கார்களும் வந்தது. அதே சமயத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் எம்.பி.ப.குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் கார்களும் ஒரே சமயத்தில் நுழைய முற்றபட்டதால் 10 நிமிடம் இரண்டு வாகனங்களுக்கும் இடையே ஒலிகளை எழுப்பி யார் முன் செல்வது என்ற வாக்குவாதம் நடைபெற்றது.
பின்னர் காவல்துறையினர் தலையிட்டு அனைவரையும் காரை விட்டு இறங்கிப்போகச்சொல்ல வலியுறுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் காவல்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க நடந்து வந்து முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுகவினர் தங்களது கார்களை ஒலி எழுப்பி உள்ளே நுழைந்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மன்னர் முத்தரையர் சிலை அமைந்துள்ள பாரதிதாசன் சாலை ஒத்தக்கடை பகுதி முழுவதும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இரு சக்கர வாகனங்கள் கூட இந்த பகுதியில் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளான தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், கண்டோன்மென்ட், நீதிமன்றம் சாலை, பறவைகள் சாலை, காண்வெண்ட் ரோடு உள்ளிட்ட பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காலை-மாலை என நேரத்தில் வேலை செல்பவர்கள் அனைவரும் மிகுந்த சிரமப்பட்டுளனர்.
முத்தரையர் சதயவிழாவினை முன்னிட்டு பாதுகாப்புக்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபட்ட நிலையில், திருச்சி மாவட்ட எல்லைகளிலும், முக்கிய செக் போஸ்ட்டுகளிலும் ரோந்து போலீஸார் வீடியோ பதிவுகளை பதிந்து வருகின்றனர். இளைஞர்கள் உற்சாக மிகுதியில் இருசக்கர வாகனத்தில் 3 பேரும், கார் மற்றும் டாட்டா ஏ.சி வாகனங்களில் பாதுகாப்பு விதிகளை மீறி திரளாக கூச்சலிட்டவாறு, கொடிகளை நாலாபுறமும் அசைத்தவாறு அலப்பறையை கொடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மேலும், அதன் தொடர்சியாக ஒரு சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டு இங்கும் அங்கும் சுற்றி திரிந்து அலப்பரைகளை கூட்டினர். ஒரு கட்டத்தில் அரசு விழாவாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இதுபோன்று வீலிங் செய்யக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியபோது இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
— Indian Express Tamil (@IeTamil) May 23, 2023
இது ஒரு புறமிருக்க, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்திரையருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையிலும் இதுவரை அந்த மணிமண்டபம் திறக்கப்படவில்லை.
இந்த சதய விழாவிற்கு முன்னதாக அந்த மணிமண்டபத்தை திறக்க வேண்டுமென கடந்த மாதமே பாஜகவினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை மணிமண்டபம் திறக்கப்படாததால் பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1991 முதல் இன்று வரை முத்தரையர் சமூகத்தை சேர்தவர்களே திருச்சியின் முக்கியத்தொகுதிகளுள் ஒன்றான ஸ்ரீரங்கம் தொகுதியில் எம்.எல்.ஏக்களாக இருந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.