திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான ராஜ் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக்கை தூளாக்கி அதனை மறுசுழற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மதியம் 1:30 மணி அளவில் குடோனில் இருந்து புகை வரவே அருகில் இருந்தவர்கள் அதன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் மற்றும் திருச்சி கண்ட்டோன்மென்ட் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் காற்று அதிகமாக வீசியதால் அந்த குடோனுக்கு அருகே இருந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்ட்டிக் பொருட்கள் குடோனுக்கும் தீ பரவியதால் அந்த குடோனும் தீக்கு இரையானது.
இந்த நிலையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசரனையில் இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகியிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
க.சண்முகவடிவேல்