திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி கும்பிட வருவது வழக்கம். இதனால் அந்தப்பகுதியில் டாஸ்மாக் மதுபான விற்பனை நேரத்தை கடந்து நள்ளிரவிலும் அதிகாலையும் மது விற்பனை படுஜோராக நடப்பது வழக்கம். இப்படி நடக்கும் மது விற்பனையை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சமயபுரம், கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட், மேளவாளாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சமயபுரம் அருகே உள்ள மேலவாளாடி பெரியார் நகரை சேர்ந்த ராஜா (வயது 47) என்பவர் போலி மது விற்பதாக தகவல் கிடைத்தது.
இதையும் படியுங்கள்: கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: சிறுவாணி அணை நீர்மட்டம் 2.85 அடியாக சரிவு
இதைத்தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கரூர் பகுதியில் இருந்து போலி மதுபானங்களை வாங்கி சமயபுரம், மேலவாளாடி, கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து 500 'குவார்ட்டர்' மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ராஜாவையும், போலி மதுபாட்டில்களையும் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார், ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil