க.சண்முகவடிவேல்
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் கக்கன் காலனி செல்லும் வழியில் உள்ள மதுபானக் கடையை அதன் ஊழியர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் மூடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த திருவெறும்பூர் அருகேயுள்ள காந்தி நகர் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு, பிரவீன் ஆகிய இருவரும் தங்களுக்கு கடையை திறந்து மதுபானம் எடுத்து தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு கடை ஊழியர்கள் மறுத்ததால் இருவரும் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
மேலும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனையடுத்து கடை விற்பனையாளர் இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவெறும்பூர் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவலர் வீரமணி ஆகியோர் விசாரணை நடத்தியதில், விஷ்ணு பிரவீன் இருவரும் போதையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் இருவரும் போலீசாரை கடும் வார்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அங்கிருந்த மக்கள் சிலர் அவர்களை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர்களை உடனடியாக மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் பிரவீன், விஷ்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், ரவுடிகள் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“