Trichy Police colony people request to remove damaged water tank: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி போலீஸ் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டவேண்டி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
திருவெறும்பூர் அருகே சுமார் 35 வருடங்களுக்கு முன்பு உருவானது நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் காலனி. அப்பொழுது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டது.
அப்படி கட்டிக் கொடுக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை நவல்பட்டு ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. அந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி தற்போது வரை போலீஸ் காலனி பகுதி மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்து, சிமெண்ட் பூச்சு உதிர்ந்த நிலையில் உள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. அப்படி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் அருகில் உள்ள வீடுகளின் மேல் விழும் சூழல் ஏற்படும்.
இதையும் படியுங்கள்: 21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்
இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுமானால் அருகில் உள்ள வீடுகளை மட்டுமல்லாது அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் மீதும் விழும் அபாயம் இருப்பதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் அந்தப்பகுதியே அச்சத்தில் இருக்கின்றது.
இதனால் பழுதடைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு போலீஸ் காலனி பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil