தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் சென்னையிலிருந்து நெல்லை, மதுரை கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் திருச்சி வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், திருச்சி பேருந்து நிலையத்தில் இடப் பற்றாக்குறையும் நெருக்கடியும் ஏற்படும்நிலை உருவாகியிருக்கிறது. இதனை முன்னிட்டு, திருச்சியிலிருந்து கூடுதலாக 670 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சிக்கு வந்து, திருச்சிக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி, தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊா்களுக்கு அக்.28ஆம் தேதி இன்று முதல் 100 கூடுதல் பேருந்துகளும், அக்.29, 30ஆம் தேதிகளில் 570 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இதேபோல தீபாவளி முடிந்து மீண்டும் அவரவா் பணியிடம் மற்றும் ஊா்களுக்குத் திரும்பும் வகையில் அக்.31, நவ.1, 2, 3 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
முன்னதாக, தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி மன்னார்புரம் அணுகு சாலையில் தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி துவக்கி வைத்தார்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி மாநகரில் இன்று 28ஆம் தேதி முதல் வருகிற (04.11.2024) நான்காம் தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.
தற்காலிக பேருந்து நிலையத்தில் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா மீனா திரையரங்கு எதிரே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மதுரை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் அணுகு சாலை மற்றும் இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் இயக்கப்படும்.
தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
வழக்கம்போல், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள் இயங்கும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரத்திற்கு புறநகர் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“