திருச்சி மாநகரத்தில் கடந்த 4 நாட்களில் அரசு மதுபானங்களை விற்பனைக்காக பதுக்கிய 78 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 605 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியப்பிரியா ஸ்ரீரங்கம் மேலூர் வடக்குதெரு, கிழக்குதெரு, கொள்ளிடக்கரை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நேரடியாக மதுவிலக்கு சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது மேலூர் வடக்குதெருவில் வசித்து வரும் மருதமுத்துவின் மகன் பிரபு வீட்டில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், அந்த பகுதியில் ஏற்கனவே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்று வந்த தங்கபொண்ணு என்கிற மூதாட்டிக்கு கள்ளசந்தையில் மதுபானம் விற்கக்கூடாது என்றும், வாழ்வாதாரத்துக்கு வேண்டிய உதவிகள் செய்வதாகவும் மாநகர காவல் ஆணைய சத்திய பிரியா அறிவுரை வழங்கினார்.
விழுப்புரம் செங்கல்பட்டு விவகாரத்திற்கு பிறகு, கடந்த 4 நாட்களாக திருச்சி மாநகரத்தில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“