தமிழகத்தில் நேற்று 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி திருச்சியில் காவல் ஆணையர், டி.ஐ.ஜி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பணி ஓய்வு பெற்ற பிறகு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக அருண், சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
Advertisment
திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக எம். சத்ய பிரியா நியமிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றாா். தற்போது அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னையில் பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைவராக (ஐஜி) நியமிக்கப்பட்டுள்ளாா்.
அவருக்குப் பதிலாக, சென்னையில், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு தலைவராக (ஐஜி) இருந்த என்.காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல, திருச்சி சரக காவல் துணைத் தலைவராக ( டிஐஜி ) இருந்த ஏ. சரவணசுந்தா், கோவை சரக டிஐஜியாக (காத்திருப்போா் பட்டியல்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக காஞ்சிபுரம் சரக டிஐஜியாக இருந்த பி. பகலவன் திருச்சி சரக காவல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
முன்னதாக, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையராக பணியாற்றி வந்த சத்ய பிரியாக்கும், ஒரு உதவி ஆணையருக்கும் இடையே மோதல் இருந்ததாக அதன் பிறகு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் 15 நாட்களிலேயே மீண்டும் அவர் அதே இடத்திற்கு பொறுப்பேற்றார். இந்நிலையில் காவல் ஆணையருக்கும் அவருக்கு நடந்த வாக்குவாதத்தின் காரணமாக இந்த பணியிட மாற்றம் நிகழ்ந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் காவல் ஆணையரும், டிஐஜியும் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டது காவல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“