திருச்சி மாநகரில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்கும் 52 மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல் துறையினருக்கு பாக்கெட் கேமரா வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தலைமை தாங்கி ரோந்து காவலர்கள் 54 பேருக்கு பாக்கெட் கேமராக்களை வழங்கினார்.
இதையும் படியுங்கள்: திருச்சி ரவுடி பிறந்தநாள்… ஆயுதங்களுடன் நண்பர்களுக்கு கறி விருந்து : 10 பேரை தூக்கிய போலீஸ்
பின்னர் காவல் ஆணையர் சத்திய பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது: இந்த பாக்கெட் கேமராக்கள் ஹைவே பெட்ரோல் (நெடுஞ்சாலை ரோந்து) போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது ரோந்து காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் அதை விசாரிக்கும்போது முழுவதும் பதிவாகிவிடும். பின்னர் விசாரணைக்கு அந்த பதிவுகள் நல்ல பயனை அளிக்கும். இந்த கேமராக்களின் மூலம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும். இது 64 ஜி.பி. மெமரி திறன் கொண்டது. அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ள வசதியும் உள்ளது. குறைந்தபட்சம் ஐந்து மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம்.
திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் மதுபானம் விற்பவர்கள் மீதும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்கும் 52 மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எந்த புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் சென்று அதிரடியாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil