திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து எனப் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போலி பாஸ்போர்ட், அயல் நாடுகளில் இருந்து போதை பொருட்களை கடத்தியது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தண்டனை காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப சட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருப்பவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், முருகன் உள்ளிட்ட முக்கிய நபர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் சிலர் அங்கிருந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், முகாமில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து அவ்வப்போது உள்ளூர் காவல்துறையினரும் முகாமில் அதிரடியாக சோதனை நடத்தி செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் 6 உதவி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தநிலையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“