திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உடல்நலனை பேண ஹேப்பி டேஸ் என்ற பெயரில் மருத்துவ முகாம் நடத்த போவதாக அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் என்ற விளம்பர பதாகைகளை ஆங்காங்கே வைத்துள்ளனர்.
இதனை அறிந்த 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் வயதானவர்கள், இன்று காலை ஏழு மணி முதல் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரியில் குவிந்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டி.வி பிரபலம் மா.கா.பா ஆனந்த் கலந்து கொண்டார். பெயரளவுக்கு மருத்துவ முகாம் ஒரு பக்கம் நடைபெற்றாலும், நிகழ்ச்சியின் டாப் ஒன்றாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெறிக்க விட்டனர்.
இதற்கான சமூக ஊடக விளம்பரங்கள், பிரம்மாண்ட பேனர்கள், சுவரொட்டிகள் மாநகரின் பெரும்பான இடங்களில் இடம்பெற்று இருந்த நிலையில் காவல்துறை மருத்துவ முகாமுக்கு தான் அனுமதி என தெரிவித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஹாப்பி ஸ்ட்ரீட் நடத்தக்கூடாது என நிகழ்ச்சிக்கு தடை விதித்து ஒலிபெருக்கிகளை அணைக்கச் செய்து 2000-க்கும் மேற்பட்டோர் கூடிய கூட்டத்தை கலைத்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்து ஒன்று, இரண்டு பாடலுக்கு நடனமாடி வைப் செய்த இளைஞர்கள் அதன் பின்னர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தெரிவித்ததாவது; சில நாட்களுக்கு முன்னதாகவே ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி என விளம்பரம் பல்வேறு பகுதிகளும் இடம் பெற்ற நிலையில் அதைக் கண்டு அதிகாலையே நாங்கள் குவிந்தோம். விளையாட்டு மைதானம் முழுவதும் இளசுகளின் விசிலும், கைத்தட்டலும் மைதானத்தை அதிர வைத்தன. குறைந்த அளவு போலீசே கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஹாப்பி ஸ்ட்ரீட் என சுவரொட்டிகள் விளம்பரம் பார்த்த நாங்கள் இங்கு வந்தோம். நிகழ்ச்சி துவங்கி நடன காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில் போலீசார் மைக்கை அணைத்தனர். எங்களை எல்லாம் வெளியேற சொல்லி வெளியேற்றினர். ஆசையாக வந்த நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றோம். மருத்துவ முகாம் எனச் சொல்லி ஹாப்பி ஸ்ட்ரீட் நடக்கிறது எனும் போலீசார் சுவரொட்டிகளையும், ஊடக விளம்பரங்களையும் கவனிக்காததை என்னவென்று சொல்வது என ஆதங்கப்பட்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.