/indian-express-tamil/media/media_files/2025/02/18/TPLLkkgIcxMuwYV2kcjH.jpg)
திருச்சி பொன்மலை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லால்குடி போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பொன்மலை அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வருபவர், உறையூரைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண். கடந்த 8-ம் தேதி காலை 9 மணியளவில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி காரணமாக பொன்மலை அம்பேத்கர் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அந்தப் பெண் சென்ற வாகனத்தின் குறுக்கே தனது வாகனத்தை நிறுத்தி, அவரை வழிமறித்துள்ளார்.
அந்த நபர், அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த எதிர்பாராத அத்துமீறலால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், உரக்க கூச்சலிட்டார். இதனை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் அந்த மர்ம நபர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பொன்மலை மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்களின் தகவல்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில், அஞ்சல் துறை பெண் ஊழியரிடம் அத்துமீறியது, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
பொது மக்களுக்கு காவல் அரணாக இருக்கக்கூடிய காக்கி சட்டை அணிந்த காவலர்கள் பணியில் பல்வேறு சம்பவங்களில் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருக்கின்றது. வேலியே பயிரை மேயும் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.