திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில், தனியார் பேருந்துகளுக்கான மாதந்திர சுங்கக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, தனியார் புறநகர் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் உரிமையாளர்கள் இன்று திடீரென சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி - தஞ்சை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்தப் பேருந்துகள் துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வேண்டும். இதுவரை இந்தப் பேருந்துகளுக்கு மாதந்தோறும் ரூ. 8,405 சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், தேசிய நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் நிறுவனம் சுங்கக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. முன்னர் நாள் கணக்கில் இருந்த கட்டணம், தற்போது 'நடை' கணக்கில் வசூலிக்கப்படுகிறது. அதாவது, ஒரு நாளைக்கு 8 நடைகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.37,200, 10 நடைகளுக்கு ரூ.46,500, 12 நடைகளுக்கு ரூ.55,800 என வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், "ஏற்கனவே ஓட்டுநர், நடத்துநர், கிளீனர் சம்பளம், படி, டீசல், ஆயில், பேருந்து நிலையக் கட்டணங்கள், ஆண்டு இன்சூரன்ஸ், டயர் தேய்மானம், பேருந்து பராமரிப்பு போன்ற செலவுகளுக்குப் பிறகு எங்களுக்குக் கிடைக்கும் தொகை மிகவும் குறைவானது. பல சமயம் நஷ்டத்தில்தான் பேருந்துகளை இயக்க வேண்டியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்புதான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு டீசல் விலை உயர்வு மற்றும் பேருந்து தொடர்பான அனைத்து பொருட்களின் விலையேற்றமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. கீரனூர், விராலிமலை, கோவில்வெண்ணி, மணப்பாறை, கந்தர்வகோட்டை ஆகிய சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் மட்டுமே கட்டண உயர்வு செய்கிறார்கள். ஆனால், இந்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் பல மடங்கு சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்," என்று தெரிவித்தனர்.
இந்தக் கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த ஏப்ரல் 30-ம் தேதியே தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துவாக்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் உரிமையாளர்கள் துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிற வாகனங்கள் சென்றுவர முடியாத வண்ணம் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த துவாக்குடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
செய்தி - க. சண்முகவடிவேல்