திருச்சி எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து தண்ணீர் கிளப் 2023 நிறுவுதல் விழா மற்றும் “பாத்திரம் எடுப்போம்! பாதுகாப்பான உணவு உண்போம்!!” என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் தலைவர், கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கே.சதீஸ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹோட்டல் அதிபர் ஆர்.மனோகரன் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: சந்திரயான் விண்கலத்தை தத்ரூபமாக வடிவமைத்து அசத்திய பள்ளி மாணவர்கள்
மேலும், எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி இயக்குநர் டாக்டர் எம். ஹேமலதா, சுற்றுச்சூழல் அம்சங்கள் குறித்த தனது சிந்தனைகளுடன் கூடியிருந்தவர்களை வரவேற்று, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நீர் மேலாண்மை தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளில் எம்.ஏ.எம். கல்லூரியின் பங்களிப்பையும் எடுத்துக் கூறினார்.
பேராசிரியர் கே.சதீஸ்குமார் பேசுகையில், தற்போதைய தொழில்மயமான சூழலில் மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. அனைத்து இயற்கை வளங்களிலும் முதன்மையான வளம் நீர் என்றும், நீர் வளம் அனைத்து உயிரியல் உருவாக்கம், பன்முகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கும் மூல ஆதாரம் என்றும் கூறினார்.
மேலும், உணவுத்துறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய தீமைகளை அறிவியல் உண்மைகளுடன் கே.சதீஸ்குமார் எடுத்துரைத்தார். உணவு துறையில் உள்ள பல்வேறு தேவைகளான உணவு உற்பத்தி, உணவு பாதுகாப்பு, உணவு பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பிளாஸ்டிக் பூர்த்தி செய்கிறது. இது உணவினால் பரவும் நோய் அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால் இதுபோன்ற பயன்பாட்டிலிருந்து வரும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் தனிநபருக்கு உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம், பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை பாதிக்கலாம், பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம், மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று கே.சதீஸ்குமார் எடுத்து கூறினார்.
கே.சி.நீலமேகம், தனது உரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தின் பங்களிப்பினை பாராட்டினார், மேலும், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் முயற்சிகளில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவித்தார். மக்களிடையே நீர் மேலாண்மை குறித்தும் தண்ணீர் பயன்பாட்டையும் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது என்று கூறினார்.
அதன்பின்னர் சிறப்பு அழைப்பாளர் ஆர்.மனோகரன் சிறப்புரை ஆற்றியபோது தெரிவித்ததாவது; நீர் மேலாண்மையின் சவால்களான நீர் இருப்பு, மாறுபாடு, சுற்றுச்சூழல் மற்றும் தரம், திட்ட கட்டுமானம், நீர் பகிர்வு சர்ச்சைகள், நீர் நிர்வாகம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நீர் மேலாண்மை குறித்த சவால்களை எடுத்துரைத்தார். ஒரு மனிதனுக்கு சமூக விழுமியங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், இது நீர் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட தனிமனிதனை ஊக்குவிக்கிறது.
மேலும், ஆர்.மனோகரன் மேலாண்மை குறித்த தனது கருத்தை ஒரு நிமிட மேலாண்மை என்ற தலைப்பில் உரையாற்றினார், ஒரு திறமையான மேலாளரின் மூன்று நுட்பங்கள் என்பது ஒரு நிமிட இலக்குகள், ஒரு நிமிடம் பாராட்டுதல் மற்றும் ஒரு நிமிடம் கண்டித்தல் என்று விளக்கினார். பணியிடத்தில் நேர்மறையான முடிவு மற்றும் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் இரண்டு காரணிகள் அங்கீகாரம் மற்றும் பாராட்டு என்று அவர் எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சி மாணவர்களை சுற்றுச்சூழல் முன்முயற்சிகளில் ஈடுபட ஊக்குவித்ததோடு, நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த அமர்வு அனைத்து எம்.பி.ஏ மாணவர்களுக்கும் சிந்தனையைத் தூண்டும் அமர்வாக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.