scorecardresearch

பள்ளி மாணவனிடம் பாலியல் சீண்டல்: திருச்சி கணித ஆசிரியை போக்ஸோ-வில் கைது

தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணி புரிவது மட்டுமின்றி தேவி தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் வகுப்பும் நடத்தி வருகிறார்.

Pocso Act
திருச்சியில் போக்ஸோ சட்டத்தில் ஆசிரியை கைது

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோட்டப்பாளையம் ஊராட்சி வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவர் துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக இருக்கும் தேவி,  வலையப்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் இருப்பதால், துறையூர் சித்திரைப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

மேலும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணி புரிவது மட்டுமின்றி தேவி தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் வகுப்பும் நடத்தி வருகிறார். இதனிடையே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் நடத்தியதின் மூலம் மாணவர்களிடையே தேவி மிக நெருக்கமாக பழகியதாகவும், ஒரு சில மாணவர்களிடம் நள்ளிரவில் அலைபேசியின் வாயிலாக கொஞ்சிக் குலாவுவதையும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் ஒருவரிடம் அவரது பெற்றோர் கேட்டபோது எங்க டீச்சர்ட்டதான் பேசிட்டிருக்கேன் எனக்கூறி விடிய, விடிய டீச்சரிடம் பேசிககொண்டிருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாணவனின் பெற்றோர் அவனுக்கு தெரியாமல் அலைபேசி மற்றும் அவனது செயல்பாடுகளை நோட்டமிட்டதில் ஆசிரியை தேவியிடம்தான் வெகுநேரம் பேசுவதும், கொஞ்சுவதுமாக மாணவர் இருந்தது தெரியவந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவனின் பெற்றோர் தனிமையில் வசித்து வந்த ஆசிரியை தேவியை வீட்டிலேயே சென்று சத்தம் போட்டிருக்கின்றனர்.

பின்னர், இதுகுறித்து போலீஸிலும் புகார் தெரிவித்தனர். இரவு நேரங்களில் கணித ஆசிரியையுடன் அந்த மாணவர் அதிக நேரம் பேசி வந்ததும், இதன் காரணமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாகவும் பெற்றோர் தரப்பில் கணித ஆசிரியை தேவி மீது புகாரளித்தனர். இந்தப்புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட விசாரணையில், புகாரில் உண்மைத்தன்மை இருந்ததால் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தி்ன் கீழ் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

ஆசிரியையிடம் மாணவன் பாலியல் ரீதியாக பழகிய காரணத்தினால் மாணவனையும் போலீஸார் பிடித்து சிறார் காப்பகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். கணக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை மாணவனை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியதால் பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரம், கணவனை பிரிந்து இருக்கும் ஆசிரியையிடம் மாணவன் அடிக்கடி ட்யூசன் என்ற பெயரில் சீண்டியதால் ஆசிரியை மாணவனின் கவர்ச்சியில் மயங்கி இருவருமே அடிக்கடி தனிமையில் இருந்திருக்கின்றனர். இதுகுறித்து அரசல் புரசலாக கிராமத்தில் பேசப்படவே மாணவனின் பெற்றோர் ஆசிரியை மீது புகார் கொடுத்தனர் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர். ஆனாலும் படிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஒருவர் மாணவருடன் பாலியல் பிடியில் சிக்கிக்கொண்டு சிறைக்கு சென்றது ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் அவமானத்தை தேடித்தந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy private school mathis teacher arrest under pocso act

Best of Express