இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில் சிக்கி உள்ளனர். அந்தவகையில், திருச்சியை சேர்ந்த பேராசிரியை சிறப்பு பயிற்சி பெறுவதற்காக இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் அங்கு சிக்கி தவித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரோடு தொடர்பு கொண்ட அவரது கணவரிடம் ராதிகா கண்ணீர் விட்டு கதறியிருக்கின்றார். என்ன செய்வது எனத் தெரியவில்லை, 5 நிமிடத்திற்கு ஒருமுறை குண்டு விழும் சப்தம் கேட்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றி மீட்டு விடுங்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்.
திருச்சி கருமண்டபம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராதிகா. இவர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். சொட்டுநீர் பாசனம் குறித்த 3 வார பயிற்சிக்காக கடந்த செப்டம்பர் 23ம் தேதி காசாவிற்கு 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இவர் சென்ற சில நாட்களிலேயே போர் தொடங்கி விட்டது. இதனால் அங்குள்ள பதுங்கு குழி அமைப்பில் ராதிகா தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
/indian-express-tamil/media/media_files/CPA2yVGjNIWPbNDTGd8L.jpeg)
இந்தநிலையில், தமிழக முதல்வரின் வேண்டுகோளினை ஏற்று அங்கிருப்பவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசும் தற்போது இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அங்குள்ள தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அந்தவகையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களில் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்த நபர்களில் கோவை, திருவள்ளூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 தமிழர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, 12.10.2023 அன்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சிறப்பு விமானத்தில் இன்று வெள்ளிக்கிழமை புதுடெல்லி வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“