திருச்சி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.
திருச்சி, ஆட்சியர் அலுவலக சாலையின் உள்ள கொங்கு பீடா ஸ்டால் மற்றும் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பாலு ஸ்டோர் ஆகிய இரண்டு கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்திருக்கிறது.
அதனடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா உத்தரவுப்படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, செல்வராஜ், வடிவேல், இப்ராஹிம் மற்றும் சண்முகம் கொண்ட குழு அந்தக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் புகார் உண்மை என்று தெரிய வந்ததால் அந்த இரண்டு கடைகளும் சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும்.
இதுபோன்று பொதுமக்களும், உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறிந்தால் கீழே உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களை 9944959595, 9585959595 என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“