அகில இந்திய வானொலி (AIR) பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
துரை வைகோ வெளியிட்ட அறிக்கையில், திருச்சி வானொலியில் அதிகாலை 5:50 முதல் இரவு 11 மணி வரை தமிழிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5:50 வரை ஹிந்தியிலும் ஒலிபரப்பு செய்யப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாற்றமானது சென்னை பண்பலை எண் 101.4 இல் 02.07.2024 அன்றிலிருந்தும், திருச்சி பண்பலை 102.1 இல் 09.04.2025 இல் இருந்தும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், இந்த ஹிந்தி ஒலிபரப்புகள் டெல்லியிலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"குமரிக்கு ஒரு நீதி, திருச்சிக்கு ஒரு நீதியா?"
விளம்பர வருமானம் இல்லாத கன்னியாகுமரி பண்பலையில் (குமரி FM) 24 மணி நேரமும் தமிழ் ஒலிபரப்பு செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய துரை வைகோ, திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஹிந்திக்கு மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என கண்டித்துள்ளார். "இதை இப்படியே தொடர அனுமதித்தால், அனைத்து பண்பலைகளும் முழு நேரமும் ஹிந்தி ஒலிபரப்பிற்கு மாற்றப்பட்டுவிடும் அபாயம் உள்ளது" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றிய அரசுக்கு உடனடி கோரிக்கை
ஆகவே, ஒன்றிய அரசு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, உடனடியாக திருச்சி மற்றும் சென்னை வானொலியில் முழு நேர தமிழ் ஒலிபரப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்வதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
க. சண்முகவடிவேல்.