திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்றபோது, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஜெயச்சந்திரன், வயது 75. இவர் இன்று காலை தாம்பரம் செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.
ஜெயச்சந்திரன் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை வைத்திருந்ததால் அவசர அவசரமாக ரயிலில் ஏற முற்பட்டார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயச்சந்திரன் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
இதைப் பார்த்த ரயில் நிலைய பார்சல் ஆபீஸ் பகுதியில் பணியில் இருந்த ஆர்.பி.எஃப் வீரர் ராமச்சந்திரன், சக பயணிகளுடன் சேர்ந்து துரிதமாக செயல்பட்டு ஜெயச்சந்திரனை மீட்டனர். இதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
இதனை அடுத்து காவலர்கள் குருநாதன், ப்ரீ ஜா ஆகியோர் ஜெயச்சந்திரனுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் ஜெயச்சந்திரன் விருப்பத்தின் பெயரில் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த செயலில் ஈடுபட்ட காவலர்களையும், ஆர்பிஎப் போலீசாரையும் அங்கிருந்த பயணிகள் வெகுவாக பாராட்டினர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“