க.சண்முகவடிவேல்
Trichy: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ராபரட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள முருகன், பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 13 ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு பதினோரு முப்பது மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நளினி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்த ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை புறப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் இன்று நேர்காணலில் ஆஜர்படுத்தப்பட்டு பின்பு திருச்சி முகாமுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றனர்.
முன்னதாக இலங்கைக்கு செல்ல வேண்டும் என வழக்கு தொடர்ந்த சாந்தன் உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்பு காலமானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“