2012-ம் வருடம் இதே மாதம் இதே நாள் 29?-ம் தேதி தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்டிருந்தது. ஒட்டு மொத்த நிர்வாகமும் பரபரப்புக்குள்ளாகியிருந்தது. திமுக ஆட்சியின் போது காவல்துறை, வருவாய்த் துறை என அனைத்து அரசு துறைகளின் அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருந்த எம்.டி., 'ராமஜெயம் கொலை செய்யப்பட்டு விட்டார்' என்கிற தகவல் தான் இதற்கு காரணம்.
திருச்சி மாவட்ட திமுகவின் முக்கிய பிரமுகரும், திமுக முதன்மை செயலாளரும், தற்போதைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியான தொழிலதிபர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம் முட்புதரில், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியால் பூடகமாகவும், அதிமுக தலைவர் மறைந்த ஜெயலலிதாவால் கடும் கோபத்துடனும் "திருச்சிக்கு இரண்டு அமைச்சர்களா ?" என சுட்டிக்காட்டப்பட்டவர் தான் இந்த ராமஜெயம். மாவட்ட ஆட்சியர் முதல் மாநகர காவல்துறை ஆணையர் வரை இவருக்கு நேரில் 'குட் மார்னிங்' சொல்லிவிட்டுத்தான் தங்களின் அன்றாட பணிகளை கவனிக்க போவார்கள். அப்பேற்பட்டவருக்கே இந்த நிலையா ? என்று ஒட்டுமொத்த தமிழகமும் அரண்டு போனது.
கொலை நடந்த அன்று காலை சட்டமன்றத்தில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஸ்டாலின், "இது திட்டமிட்ட படுகொலை; மாநில காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் சிபிஐ விசாரணை கேட்போம்" என்று பேசினார். டுத்த நாள் நடந்த ராமஜெயத்தின் இறுதி ஊர்வலம் திருச்சியின் அறிவிக்கப்படாத விடுமுறை நாளாக மாறியது. திமுக மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களும் நேருவின் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்து விட்டு போனார்கள்.
தனது 'கணவரை காணவில்லை' என தில்லைநகர் காவல் நிலையத்தில் ராமஜெயத்தின் மனைவி லதா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தனது விசாரணையை தொடங்கியது. அப்போது ஸ்ரீரங்கம் உதவி ஆணையராக இருந்த வீராசாமி நேரடியாக அந்த புகாரை வாங்கி பதிவு செய்தார். அடுத்து மாநகர குற்றப்பதிவேடுகள்துறை உதவி ஆணையராக இருந்த ஜெயச்சந்திரன், இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தினார். ந்த காலை நேரத்தில் ராமஜெயம் நடைபயிற்சி போன பகுதி, அவரது உடல் கிடந்த திருச்சி கல்லணை சாலையில் செல்போன் டவர்களில் பயன்பாட்டில் இருந்த சுமார் ஒன்பது லட்சம் செல்போன் நம்பர்களையும் எடுத்து, அவர்கள் அனைவரையும் அழைத்து அவர்கள் யார் என்ன காரணத்திற்காக அன்று காலை அந்த நேரத்தில் இருந்தார்கள் என்பதை விசாரித்து தெரிந்து கொண்டது.
ராமஜெயத்துடன் நேரடி தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள், வியாபாரப் பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து, அவர்கள் இந்த சம்பவத்திற்கு முன்னும் பின்னும் எங்கெங்கே போயிருந்தார்கள் என்ன செய்தார்கள்? யார் யாரிடம் பேசினார்கள் என்கிற விவரங்களை சேகரித்தது.
கைகள், கால்கள் டேப் ஒட்டப்பட்டு, அதன் மீது கட்டுக் கம்பியால் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்டு, ரத்த காயத்துடன் அவர் இறந்து கிடந்த காட்சி கொடூரமானது. 'ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அந்த காலகட்டத்தில் பல்வேறு கதைகள் உலவின. அரசியல் தொடர்பான கொலை என்றும், தமிழகத்தின் மிகச் செல்வாக்கு மிக்க குடும்பத்து பெண்ணை அவர் சீரழித்து விட்டார்' என்றும் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், அவரைப் பலமுறை கேவலமாக்கி கொலை செய்தன. ந்த செய்திகள் அவரது குடும்பத்தாரை, குறிப்பாக அவரது அண்ணன் கே.என்.நேருவை மிகுந்த வேதனைக்கு உள்ளாகியது. ஆனாலும், போலீசார் விசாரணையில் குற்றவாளி என யாரையும் கண்டறிய முடியவில்லை. கொலை நடந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் "ராமஜெயம் இருந்திருந்தால் இந்த மாநாடு இன்னும் சிறப்பாக நடந்திருக்கும்" என்று திமுக தலைவர்களே பேச, மேடையிலேயே நேரு கண் கலங்கி கண்ணீர் விட்ட காட்சிகளும் அரங்கேறியது. மஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் அழைக்கப்பட்டனர். அவர்கள் முதன் முதலாக விசாரணையை சந்தித்தபோது பலருக்கு அவமானம், அச்சம், வேதனை, பதட்டம் இருந்தது. விசாரணையின்போது வியர்த்துக் கொட்ட, வாய் உலர்ந்து போக, பிபி ஏறி திரும்பியவர்கள், அதன் பின்னர் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்பட, வழக்கு சிபிசிஐடிக்கு, சிபிஐக்கு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு என மாற்றப்பட, ஒவ்வொரு முறையும் புதிய அதிகாரிகள் வரும்போதும் மீண்டும் இவர்கள் எல்லோரையும் அழைத்து விசாரித்தார்கள்.
விசாரணைக்கு போனவர்களும், 'அன்னைக்கு காலையில ஆறு மணி இருக்கும்..., டீ கடைக்கு போனோம்..., வடை சாப்பிட்டோம், டீ குடித்தோம் என்று ஆரம்பித்து தங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்லி விட்டு வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் புதிதாக வந்த அதிகாரி இவர்களை அழைத்து கேள்வி கேட்கும்போது அன்று காலை எதற்காக குறிப்பிட்ட இடத்திலிருந்து யாரிடம் பேசினேன், எங்கிருந்து வந்தேன், எங்கே போனேன், முதல் நாள் யாருடன் இருந்தேன், அடுத்த நாள் யாருடன் இருந்தேன் என்பது போன்ற தகவல்களை எல்லாம் விசாரணைக்கு போனவர்கள் மனப்பாடம் போல் ஒப்பித்தார்கள்.
'நான் கேட்கவே இல்லை. நீங்களா இவ்வளவு சொல்றீங்களே?' என்று அதிகாரி கேட்க, 'உங்களுக்கு தான் சார் இது புதுசு... எங்களுக்கு இது பழகி போயிருச்சு. இதத்தானே 12 வருசமா கேட்டாங்க, நீங்களும் இதைத்தானே கேட்க போறீங்க' என்று ஜாலியாக பேசிவிட்டு அதிகாரிகள் வாங்கிக் கொடுத்த டீயை குடித்து வடையை சாப்பிட்டு விட்டு வர ஆரம்பித்தார்கள். அதிகாரிகளோ அரசு சம்பளத்தில் சொகுசு காரில், சொகுசு பங்களாவில் விசாரணை என்ற பெயரில் ஜாலியா இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக இருந்த சைலேஷ் குமார்யாதவ் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துரிதப்படுத்தினர். அதுவும் நமத்துப்போகவே, ராமஜெயம் குடும்பத்தார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 09.02.2022 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு இந்த விசாரணையை கையில் எடுத்தது.
தற்போது ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பியாக ஜெயக்குமார் இருக்கிறார். டி.எஸ்.பிக்கள் ஜெயச்சந்திரன், மதன், செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, ஞானவேலன், செந்தில்குமார், குமார் இன்னும் 20 போலீசார் உள்ளிட்ட திறமையான நேர்மையான காவல்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்த நாட்களில் திருச்சியின் முக்கிய ரவுடிகள் தூக்கிவரப்பட்டு அவர்களுக்கும் ராமஜெயத்துக்கும் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் நிலப் பிரச்சனை தொடர்பான பஞ்சாயத்துகளில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதா அதில் இவர்கள் பாதிக்கப்பட்டார்களா? அதனால் அவர் மீது கோபத்தில் இருந்தார்களா என்று விசாரித்தனர்.அதில் பலருக்கு காவல்துறையின் சிறப்பு கவனிப்பும் தரப்பட்டது. விசாரணைக்கு வந்து விட்டுப் போன பின்னர் அவர்கள் தங்கள் ஃபோனில் இருந்து யார் யாருடன் பேசுகிறார்கள் என்ன தகவல்கள் சொல்கிறார்கள் என்பதை குரல் பதிவாகவே கேட்கும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் திறமையாக தங்கள் விசாரணையை நடத்தியது சிறப்பு புலனாய்வு குழு.
இந்த விசாரணையில் தமிழகத்தின் பிரபல கொள்ளை, கொலை சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக திருச்சியை சேர்ந்த சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சத்தியராஜ், தினேஷ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் உள்ளிட்ட 13 பேருக்கும் சம்மன் அனுப்பி அவர்களை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 6, கோர்ட்டில் ஆஜர்படுத்தி உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு மாருதி வெர்ஷா கார் அந்தப் பகுதியில் நடமாடியதை மட்டும்தான் விசாரணை குழுவினர் அடையாளப்படுத்த முடிந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 1665 மாருதி வெர்ஷா கார்களின் உரிமையாளர்களை அழைத்து, அந்த தேதியில் அவர்களின் கார் எங்கே இருந்தது யார் பயன்படுத்தினார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு வரிசைப்படுத்தினார்கள். ஆனால் அதிலும் உபயோகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அப்போது திருச்சிக்கு வந்த முன்னாள் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு 'அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது; அப்படி எதுவும் கிடையாது; எனக்கு அது தெரியாது' என்கிற மாதிரியான பதில்களையே சொல்லி விட்டுப் போனார்.
தன்னை எதிர்த்து தேர்தலில் கடுமையாக வேலை பார்த்ததால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் தனக்கு நெருக்கமான காவல்துறை ஆட்களை வைத்தே ராமஜெயத்தை கொலை செய்து விட்டார் என்றும், ஒரு இடம் தொடர்பான சர்ச்சையில் எதிர்த்துப் பேசியதால் சசிகலா தான் ஆளை வைத்து தீர்த்துக் கட்டி விட்டார் என்றும் உலவிய வதந்திகளுக்கு அளவே இல்லாமல் போனது. இதற்கிடையே ராமஜெயம் இல்லாமல் திருச்சியும், நேருவின் குடும்பமும் இயங்க ஆரம்பித்துவிட்டது. அவரது மகள் ஜனனிக்கு 2016 இல் திருமணம் நடந்தது. மகன் வினித்துக்கு 2022-ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் தாயும் தந்தையுமாக நின்று திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் அமைச்சர் கே.என்.நேரு தம்பதியினர்.
ராமஜெயம் உயிரோடு இருக்கும்போது அவருக்கு வலது கரமாக இருந்தவரும் தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்படுபவருமான திருச்சி திமுகவின் முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகரிடம் இந்த விசாரணை குறித்து கேட்டபோது, "புதுசா ஒரு அதிகாரி டூட்டிக்கு வந்தா ஏற்கனவே கூப்பிட்டு விசாரிச்சவங்களையே கூப்பிட்டு விசாரிக்கிறதே வேலையா போச்சு. எங்களுக்கெல்லாம் ராமஜெயம் தான் அச்சாணி. அவருக்கு எதிரிகள் யாருன்னு பாத்து விசாரிக்காம எங்களையே கூப்பிட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க. அவ்வளவு சாதாரணமாக ராமஜெயத்தை யாரும் டீல் பண்ணிவிட முடியாது, மல்லுக்கட்டி அவரை ஒரு காரில் ஏற்றுவதும் நடக்காது, அவர் ஒருத்தரை நம்பி ஒரு காரில் ஏறுவதும் அவ்வளவு சுலபமில்ல. அதனால எந்த லெவல்ல பிரச்சனை இருக்குமோ அந்த லெவல்ல விசாரிங்க சார்'னு நானும் பல தடவை சொல்லிட்டேன்" என்றார் அவர் வெறுப்புடன்.
"ராமஜெயம் கொலை தொடர்பாக தகவல் கொடுப்போருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும்" என்று ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியும் பார்த்து விட்டது காவல்துறை. அப்படியும் உருப்படியான தகவல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ராமஜெயம் கொலை வழக்கை புலன் விசாரணை செய்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போதெல்லாம், "வழக்கு விசாரணை சிறப்பான திசையில் போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் இன்னும் சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் கண்டுபிடிக்கக்கூடிய வழக்கு தான் இது. விரைவில் கண்டுபிடிப்போம்" என்ற பதில்தான் தொடர்கிறது. ஆனால் வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகத்தான் கிடக்கிறது.
கடந்த 12 ஆண்டுகளாக ஒரு கொலை வழக்கில் எண்ணற்ற ஆதாரங்கள், கிடைத்தும், கிடைக்காத மர்மமும், இந்த வழக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலமுறை விசாரிக்க காவல்துறையினர் செய்த செலவுகளும், நேரங்களும் வீணாகிக்கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை. ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை எப்போது முடிவுக்கு வரும், இந்த வழக்கை விசாரிக்கும் திறமையான காவல்துறையினர் எப்போது உருப்படியான வேலைகளை பார்க்கப்போகின்றனர் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. எத்தனையோ கொலைக்கான காரணங்களையும், குற்றவாளிகளையும் துப்பு துலக்கி கண்டுபிடித்துள்ள தமிழ்நாடு காவல்துறையால் அதிகாரம் மிக்க பதவியில் இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், முக்கிய புள்ளியுமான ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதது யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
முன்னதாக, ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மார்ச் 29,2024) திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் ராமஜெயம் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, மாநகர மேயர் அன்பழகன், பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு உள்ளிட்ட திருச்சி திமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.