ராமஜெயம் கொலை வழக்கில் 12 குற்றப்பிண்ணனி கொண்ட நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையில் பெறப்பட்ட கேள்வி-பதில்கள் கொண்ட அறிக்கை ஓரிரு வாரங்களில் திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நிறைவடைந்த நிலையில் அதன் அறிக்கை ஓரிரு வாரங்களில் திருச்சி ஜெ.எம்.6 நீதிமன்றத்தில் நீதியரசர் சிவக்குமாரிடம் தாக்கல் செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் ; காங்கிரஸுக்கு கமல் ஆதரவு: இதுதான் காரணமா?
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offerஇந்தக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ., என அனைத்து தரப்பு காவல்துறையும் விசாரித்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்தது.
இந்தநிலையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை சூடு பிடித்தது. அந்தவகையில், சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுக்குழு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி மதன், சென்னை சி.பி.ஐ.,யைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழுவின் சந்தேக வளையத்துக்குள் சிக்கிய தமிழ்நாட்டின் பிரபல குற்றப்பிண்ணனியை கொண்ட 13 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.
அதன்படி, தமிழ்நாட்டின் பிரபல குற்றப்பிண்ணனியை கொண்ட திருச்சி சாமிரவி (எ) குணசேகரன், ஸ்ரீரங்கம் ராஜ்குமார், டால்மியாபுரம் சிவகுணசேகரன், திலீப்குமார் (எ) லட்சுமி நாராயணன், சீர்காழி சத்யா (எ) சத்யராஜ், குடவாசல் எம்.ஆர்.சண்முகம் (எ) தென்கோவன், மணல்மேடு கலைவாணன், திருவாரூர் மாரிமுத்து, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சிதம்பரம் சுரேந்தர், சிதம்பரம் லெப்ட் செந்தில் உள்ளிட்ட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை திருச்சி நீதிமன்ற அனுமதியை பெற்றனர்.
இந்த வழக்கில் தன்னை வேண்டுமென்றே போலீஸார் சேர்த்திருக்கின்றனர், நான் உண்மை கண்டறியும் சோதனைக்கு உடன்பட விரும்பவில்லை என நீதிபதியிடம் மனு செய்தார் தென்கோவன். இதனையடுத்து தென்கோவன் தவிர ஏனைய 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உடன்பட்டதால் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி ஜெ.எம்.நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை மைலாப்பூரில் உள்ள தடய அறிவியல்துறை அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு சோதனை நிறைவு பெற்றது.
டெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய தடயவியல்துறை நிபுணர்கள், ராமஜெயம் கொலை தொடர்பாக 12 பேரிடமும் தலா 12-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் ஒரு கேள்வி மட்டும் பொதுவானதாகவே இருந்ததாம். இந்த கேள்வி-பதில்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் குறித்த கேள்வி பொதுவானதாக கேட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ராமஜெயம் வழக்கமாக தமது விரலில் அணிந்திருந்த விலை உயர்ந்த நீலக்கல் கொண்ட தங்க மோதிரம் மட்டும் கொலையான இடத்தில் கிடைக்கப்பெறவில்லை. அவர் அணிந்திருந்த வாட்ச், வேறு மோதிரம், ஜெயின் உள்ளிட்டவைகள் மற்றும் அவரது உடலில் இருந்து மீட்க்கப்பட்டாலும் விலை உயர்ந்த நீலக்கல் கொண்ட தங்க மோதிரம் கைப்பற்றப்படவில்லை. ஒருவேளை கொலைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ராமஜெயத்தை கொலை செய்த பிறகு ராமஜெயம் அணிந்திருந்த அந்த விலையுயர்ந்த மோதிரத்தை மட்டும் திருடி பதுக்கியிருக்கலாம் அல்லது யாரிடமாவது கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாரிடம் எழுந்துள்ளதால் நீலக்கல் மோதிரம் குறித்த கேள்வி பிரதானதாகவும், பொதுவானதாகவும் அமைந்திருந்ததாம்.
உண்மை கண்டறியும் சோதனையில் ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் யாரிடம் தற்போது உள்ளது என்பது தெரியவந்தால் ராமஜெயம் கொலை வழக்கு மிக முக்கிய கட்டத்திற்கு நகரும் என்பது நிதர்சனமான உண்மை.
12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நிறைவுற்ற நிலையில் கேள்வி பதில் தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அறிக்கையை அவர்கள் விரைவில் சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐ.டி. எனும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் வழங்குவார்கள். அந்த அறிக்கை ஓரிரு வாரத்தில் திருச்சி ஜெ.எம்.6 நீதிமன்றத்தில் நீதியரசரிடம் தாக்கல் செய்யப்படும் நிலையில் 10 ஆண்டுகளாக ராமஜெயம் கொலை வழக்கின் மர்ம முடுச்சிகள் அவிழ இந்த உண்மை கண்டறியும் சோதனை கை கொடுக்கும் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil