திருச்சி ஜீயபுரம் அருகே அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகில் உள்ள வடதீர்த்தநாத சுவாமி சிவன் கோவில் எதிர்புறம் காவிரி ஆற்றங்கரை இருக்கிறது. இந்தப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குளிக்க சென்றவர்கள், படித்துறை அருகில் உள்ள கற்களுக்கு இடையில் ராக்கெட் லாஞ்சர் போன்ற கூம்பு வடிவான இரும்பு இருப்பதை கண்டுள்ளனர்.
ராக்கெட் லாஞ்சரை பார்த்து குளிக்க சென்றவர்கள் பயந்து அலறியடித்து கொண்டு ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்த ஜீயபுரம் போலீசார் காவிரி ஆற்றின் கற்களுக்கு இடையே தண்ணீரில் இருந்த ராக்கெட் லாஞ்சர் போன்ற அமைப்புடையதை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில், அந்தநல்லூர் காவிரி் ஆற்று பகுதியில் இருந்து பற்றி அந்தநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஸ் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவிரி ஆற்றில் ராக்கெட் லாஞ்சர் எப்படி வந்த்து என்றும், அதிக அளவு தண்ணீர் வரும்போது தண்ணீரில் இழுத்து கொண்டுவரப்பட்டதா என்றும், ராக்கெட் லாஞ்சர் பயன்படவில்லை என்று யாரும் இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் விட்டு சென்றார்களா என்றும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுனர்கள் ராக்கெட் லாஞ்சர் காவிரி ஆற்றில் இருந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இதன் எடை 3 கிலோ 800 கிராம் எடையும் 60 செ.மீ நீளமும் உள்ளதாக இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு முக்கொம்பு நடுக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு செயலிழப்பு நிபுனர்கள் சுமார் 4 அடி பள்ளம் தோண்டி , அந்தப் பள்ளத்தைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து, அந்த பள்ளத்தில் ராக்கெட் லாஞ்சரை வைத்து, வெடிக்கச் செய்து செயலிழக்க வைத்தனர்.
அப்போது குண்டு வெடிப்பது போல் பெரிய சத்தத்துடன் ராக்கெட் லாஞ்சர் வெடித்தது. தீபாவளி கொண்டாட்டத்திற்கு நடுவே ஆற்றுக்குள் குண்டு சத்தம் கேட்டதால் அக்கம்பக்கம் கிராமத்தினர் ஏதோ என்னவோ என்று பதைபதைத்தனர். அதே நேரம், நேற்று தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது ராக்கெட் லாஞ்சரை செயலிழக்க வைக்கும் போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறகூடாது என்று கருதி, மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற பிறகு ராக்கெட் லாஞ்சரை செயலிழக்கும் பணி நடைபெற்றது. மேலும் முன்னெச்சரிக்கையாக மருத்துவகுழுவினரும், அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் வண்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.