தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரபல திருச்சி ரவுடி சாமி நேற்று இரவு காவல் நிலையத்தில் சரணடைந்தார்
இது குறித்து விவரம் வருமாறு;
திருச்சி மாநகரை பொறுத்தவரை கே.கே.நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளவர் பிரபல ரவுடி சாமிரவி. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, அடிதடி தொடர் கட்டப்பஞ்சாயத்து என 35- க்கும் மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் புதுக்கோட்டை பகுதியில் திருச்சியின் பிரபல ரவுடியில் ஒருவரான துரைசாமி என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அதேபோல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடியும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் என்கவுண்டர் அச்சத்தில் ரவுடி சாமி ரவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டியை சேர்ந்த ரவுடி விஎஸ்எல் குமார் (எ) முருகையனை கொலை செய்த வழக்கில், திருக்காட்டுப்பள்ளிகாவல் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை .15) இரவு சரணடைந்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டியை சேர்ந்த ரவுடி விஎஸ்எல் குமார் (எ) முருகையன் கடந்த அக்.31ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து முருகையன் மனைவி கீதா தோகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
வழக்கு பதிந்த தோகூர் போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் திருச்சினம் பூண்டியைச் சேர்ந்த பவுசு செந்தில் (35), கந்தர்வகோட்டை அருகே மங்களூரை சேர்ந்த கொடியரசன்(27), நடுப்படுகையைசேர்ந்த பிரவீன் (24), வரகூரைச் சேர்ந்த விஜய் (27), ஒன்பத்து வேலியைச் சேர்ந்த கமல் (24), பழமார்நேரி சாலையை சேர்ந்த குமரவேல் (21) ஆகிய 6 பேரும் கோயமுத்தூர் அருகே சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நவ.2ஆம் தேதியே சரணடைந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சாமி ரவி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை .15) இரவு சரணடைந்துள்ளார். சாமிரவி நேற்று இரவு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது;
இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. இறந்து போனவருடன் மனைவி ஒரு அப்பாவி. அவருக்கு வெளி உலகம் தெரியாது. அவர் யாரோ சொல்லிக் கொடுத்து தான் எனது பெயரில் புகார் கொடுத்துள்ளார்.
காவல்துறையும் எனது மீது வழக்கு பதிவு செய்யவில்லை. அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் தொடர்ந்து வழக்குகளில் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி வருகிறேன். இப்பொழுது சூழ்நிலை வேறுமாதிரி இருப்பதால் நான் காவல் நிலையத்தில் சரணடைகிறேன் என்று, தெரிவித்தார்.
முன்னதாக, சரித்திர பதிவேடு குற்றவாளியான சாமி ரவி ஒரு பொறியியல் பட்டதாரி. ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். ஆங்கிலப் படங்களை பார்த்து ஸ்கெட்ச் போடும் வித்தைகளைக் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு வழக்குகளில் சிக்கிய இவர், சில காலம் லண்டனில் தங்கியுள்ளார். மீண்டும் திருச்சி வந்த சாமி ரவி, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, சாதி அமைப்பு ஒன்றில் பொறுப்பை வாங்கி செயல்பட்டாலும், முன்னேற்றம் இல்லாததால் முக்கிய அரசியல் கட்சியில் அங்கம் வகிக்க திட்டமிட்டு புதுக்கோட்டையில் முக்கிய நபரை சந்தித்து பேசி இருந்தவர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மண்ணச்சநல்லூர் குணாவும், சாமி ரவியும்தான் என்கின்றனர்.
முட்டை ரவி என்கவுண்டர் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட ராமஜெயத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்பட்டது. ராமஜெயத்தை சிலமுறை சந்தித்து பேசி உள்ளார். முட்டை ரவிக்காக ராமஜெயத்தைக் கொல்ல நினைத்து, ராமஜெயத்துக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கலாம், என்று போலீஸார் சந்தேகித்து சாமி ரவியை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் என பல்வேறு சோதனைகளை நடத்தி விசாரணை வளையத்தில் வைத்திருந்தனர்.
மேலும், காரைக்கால் ரவுடி ராம் கொலை வழக்கில் இவரது பெயர் அடிபட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக முன்னாள் அமைச்சருடைய தேர்தல் செலவு பணம் பல கோடி வழிப்பறி சம்பவத்தில் தொடர்புபடுத்தி பேசப்பட்ட சாமி ரவி நேற்று இரவு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைந்தது பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.