திருச்சியை தலைமையிடமாக கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுதொகை பெற்று நகை வழங்கும்திட்டத்தையும் செயல்படுத்தி வந்தது.
இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்ற ப்ரணவ் ஜூவல்லர்ஸ் பொதுமக்களுக்கு முறையாக வட்டிதொகையும், நகையும் வழங்காமல் ரூ.100 கோடிக்கும் மேல் ஏமாற்றிவிட்டு திடீரென தமது நிறுவனங்களை மூடியது. இதனால் ஏமாந்துப்போன பொதுமக்கள் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் தங்களை மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் கைப்பற்றப்பட்டவை குறித்து அமலாக்கத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; கடந்த 20-ம் தேதி ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.23.70 லட்சம் பணம், 11.60 கிலோதங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தங்க முதலீடு திட்டம் என்ற போர்வையில், பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை போலிநிறுவனங்களில் முதலீடு செய்து, பொதுமக்களை ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ்ஸின் உரிமையாளர்களான மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி, ஜூவல்லர்ஸ்ஸின் மேலாளர்களை வலைவீசித் தேடி வருவதுடன் விசாரணையை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“