கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, 2021-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டைவாய்த்தலை பகுதியில் தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் காருடன் நின்றுக் கொண்டிருந்த சிலரைப் பிடித்து, சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.
விசாரணையில், முசிறியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, முசிறி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் செல்வராஜின் தேர்தல் செலவுக்காக காரில் ரூ.3 கோடி கொண்டு வந்ததாகவும், சிலர் தங்களது காரை வழிமறித்து ரூ. 2 கோடியை பறித்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக பெட்டைவாய்த்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரபல ரவுடி சாமிரவி, சதீஷ்குமார், லட்சுமி நாராயணன், குணசேகரன், ராஜ்குமார், பிரகாஷ், சுரேஷ்குமார், மணிகண்டன், ராஜேந்திரன், நாகராஜன் ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, தேர்தல் விதிமுறைகளை மீறி கணக்கில் வராமல் கொண்டு வரப்பட்டதாக ரவிச்சந்திரன் வைத்திருந்த ரூ.1 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான புகாரின் பேரில், பணத்தைக் கொண்டு வந்த முசிறி அபிராமி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சத்யராஜ், ஜெயசீலன், ராமமூர்த்தி, சிவக்குமார், கண்ணதாசன் ஆகிய 6 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த இரு வழக்குகளின் விசாரணை, திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இருவழக்குகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மற்றும் ரூ.1.65கோடி பணத்துக்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறினர். இந்த இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரையும் விடுதலை செய்து, நீதிபதி பி.செல்வமுத்துகுமாரி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜரானார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“