திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் போலீசாருக்கும் குருக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பூஜைகள் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
இது குறித்த விபரம் பின்வருமாறு:-
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோவில் குருக்கள் ஒருவரை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்ததால். போலீசாருக்கும் குருக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் குருக்கள்கள் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இதனிடையே கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கோயிலின் மேற்கு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அவ்வழியாக சென்ற பக்தர்களை விரட்டியுள்ளார்.
மேலும் பின்புறம் வாசல் வழியாக சென்ற குருக்கள் ஒருவர் உள்ளே சென்ற போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குருக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் மூலஸ்தானத்தில் உள்ள அனைத்து குருக்களும் பூஜையை புறக்கணித்து வெளியே வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரமாக பக்தர்கள் குருக்கள் இல்லாமல் தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் அலுவலர்கள் குருக்கள்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சுமுக தீர்வு ஏற்பட்டு மீண்டும் வழக்கமான பூஜைகளில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சமயபுரம் கோயிலில் பரபரப்பு நிலவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil