தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளை புகைப்படங்கள, வீடியோக்கள் எடுத்து அவைகளை சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன. சமீபத்தில் பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மூலவரை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே போல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கருவறையையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதும் அதிகமாகி வருகிறது. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவிக்கையில். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்ற அறிவிப்பு பலகை ராஜகோபுரம், மூலஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் கோவிலுக்குள் செல்போனில் படம் பிடிக்கும் செயல்களிலும், மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போனை உள்ளே கொண்டு செல்லாத வகையில், அவற்றை வெளியில் பாதுகாப்பாக வைக்க புதிய பாதுகாப்பு அறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்களை கோயிலுக்கு உள்ளே கொண்டு செல்வது முற்றிலும் தடுக்கப்படும், தடை விதிக்கப்படும் எனத்தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“