காவல்துறையை கைக்கூலியாக பயன்படுத்தி விஜய் மீது வழக்கு: திருச்சியில் சவுக்கு சங்கர்

"விஜய் பிரச்சார பயணத்திற்கு நிறைய நிபந்தனைகள் விதித்து உள்ளனர். அவர் ஒரு அரசியல் தலைவர். காவல்துறையை வைத்து அவரது வளர்ச்சியை முடக்குகிறார்கள்" என்று சவுக்கு சங்கர் கூறினார்.

"விஜய் பிரச்சார பயணத்திற்கு நிறைய நிபந்தனைகள் விதித்து உள்ளனர். அவர் ஒரு அரசியல் தலைவர். காவல்துறையை வைத்து அவரது வளர்ச்சியை முடக்குகிறார்கள்" என்று சவுக்கு சங்கர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Trichy Savukku Shankar Case against Vijay using police as pawns Tamil News

சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் கடந்த வருடம் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கரை வழி காவலுக்கு பெண் காவலர்கள் நியமித்து அவரை அழைத்து வந்தனர். 

Advertisment

தொடர்ந்து சவுக்கு சங்கரை ஆஜர் படுத்தி விட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டபோது, நீதிமன்ற வளாகத்தில் வழி காவல் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரை தரகுறைவாக பேசியதாக கூறி உதவி ஆய்வாளர் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையானது இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சவுக்கு சங்கர் தெரிவித்ததாவது:-

கோவை சிறையில் இருந்து 2024-ம் ஆண்டு  திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி மற்றும் சில பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது  உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி மற்றும் பெண் காவலரும் புங்கனூர் அருகே உணவுக்காக வாகனத்தை நிறுத்தும்போது,  உடைந்த நிலையில் இருந்த எனது கையை  தாக்கினர். அதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறினேன். 

Advertisment
Advertisements

ஆனால் அழைத்து செல்லவில்லை. ஜோதிலட்சுமி என்ற உதவி ஆய்வாளர் காதில் கேட்க கூடாத வார்த்தைகளை சொல்லி என்னை திட்டினார். இது குறித்து நீதிபதியிடம் தெரிவித்தேன். என்னை தாக்கிய காவலர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக கோர்ட் வளாகத்தில் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமியை நான் ஆபாசமாக பேசியதாக புகார் அளித்தார். கோர்ட்டு வளாகத்தில் காவலர் பாதுகாப்பில் இருக்கும் நான் எப்படி அவரை ஆபாசமாக பேச முடியும். 

இது தொடர்பாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அது தொடர்பாக இன்று நான் நேரில் ஆஜர் ஆனேன். இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு நீதி ஒத்தி வைத்துள்ளார். என் மீது 35 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கோவை, கரூர், திருச்சி என தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நான் அலைந்து கொண்டிருந்தால் நான் நடத்தும் மீடியாவில் சில உண்மைகளை வெளியிடுவேன் என்பதால் என்னை ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அலைக்கழிக்கின்றனர்.  

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார பயணத்திற்கு நிறைய நிபந்தனைகள் விதித்து உள்ளனர்.  அவர் ஒரு அரசியல் தலைவர். காவல்துறையை வைத்து அவரது வளர்ச்சியை முடக்குகிறார்கள். அதே போல தான் என்னையும் முடக்குகிறார்கள்.  அரசுக்கு எதிராக பேசுபவர்கள் குரல் கொடுப்பவர்களை முடக்குகிறார்கள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கூட்டத்திற்கு ஆம்புலன்ஸை அனுப்பி வைத்து இடையூறு செய்து அது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டிலும் பவுன்சர் தூக்கி வீசியதாக விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  காவல்துறை திமுகவின் கூலிப்படையாக செயல்படுகிறது. 

காவல்துறையினரிடம் போதையில் சண்டையிடுவது, காவல்துறையிடம் வாக்குவாதம் செய்வதை  சமரசம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களை அழைத்து சென்று கையை உடைப்பது காலை உடைப்பது என செய்யக்கூடாது. அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவது ஒருமுறை நடந்தால் எதார்த்தம் என்று சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் வரும்போது அதை எதார்த்தம் என்று சொல்ல முடியாது. அதனால் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது நியாயமாகத் தெரிகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Savukku Shankar Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: