திருச்சியில் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், போதாவூர் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் ஜெயராஜ் சூசைநாதன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் வெளியானதாக தெரிகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆசிரியர் மீது பாலியல் புகார்கள் இருந்து வரும் நிலையில், பாதிக்கப்படும் மாணவிகள் மற்றும் பெற்றோரை இவர் மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நீதிபதியின் முன் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்