திருச்சி மாவட்டத்தில் 3 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேற்று சீல் வைத்தது தெரியாமல், இன்று பள்ளிக்கு ஆவலுடன் வந்த மாணவர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, ஜெரிக்கே உடல் ஊனமுற்றோர் பயிற்சி பள்ளி மற்றும் புனித மரியண்ணை தொடக்கப்பள்ளி ஆகிய 3 கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளை தேவராஜ் என்பவரும், பாதிரியார் அன்பரசு என்பவரும் தாளாளராக இருந்து நிர்வகித்து வருகிறார்கள். இந்த 3 கல்வி நிறுவனங்களும் அளுந்தூர் குளத்திற்குள் சுமார் 2.60 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் குளத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை அகற்றும் ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் செந்தில் என்பவர் மதுரை நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள இப்பள்ளியை மூட உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் இந்த 3 பள்ளிகளை மூடுவதற்கு ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காலி செய்து கொள்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை இடத்தை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
புதிய கல்வி ஆண்டில் இன்று பள்ளி தொடங்கிய நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் 3 பள்ளிகளையும் ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன் (தனியார் பள்ளிகள்) முன்னிலையில் வருவாய் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் நேற்று நண்பகல் மூடி சீல் வைத்தனர்.
இந்த சீல் வைப்பு சம்பவம் பெரிதாக யாருக்கும் தெரியாத நிலையில், இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி சீல் வைக்கப்பட்டு பூட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கேள்விப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளியின் முன்பு குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் காவல் ஆய்வாளர் பொறுப்பு சுப்பிரமணி, ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் பாதுகாப்புக்கு பள்ளி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மாணவ, மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, செவல்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தினர்.
நீதிமன்ற உத்தரவை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று போலீசார் கைவிரித்தனர். இதனால் தற்போது இந்த 3 பள்ளிகளிலும் பயின்ற சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அதேநேரம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கீழ்க்கண்ட மூன்று பள்ளிகளை இடிக்க உள்ளதால் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பயிற்சி பள்ளி மற்றும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளியில் சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நாகமங்கலம் சமுதாய கூடத்தில் ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் முன்னணியில் நடைபெறுகின்றது.
மேற்படி, மூன்று பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் காசி.விஸ்வநாதன் நம்மிடம் தெரிவிக்கையில்; நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டிடங்களையும் இடிப்படு மகிழ்ச்சிதான். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத இன்னும் எத்தனையோ கட்டிடங்கள் குளத்தை ஆக்கிரமித்தும், ஏரியை ஆக்கிரமித்தும் வானுயர்ந்து நிற்பது வேதனைக்குரியதாக இருக்கின்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பியதையும், நீதிமன்ற உத்தரவு வந்தும் அதை கருத்தில் கொள்ளாத அந்தப் பள்ளி நிர்வாகம் தாமகவே முன்வந்து முன்கூட்டியே தங்களின் பள்ளி நிலைமையை எடுத்துக்கூறி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டு இறுதியிலோ அல்லது விடுமுறை நாளிலோ பள்ளி செயல்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனத்தெரிவித்திருக்க வேண்டும். அதை பள்ளி நிர்வாகம் தவறி விட்டனர்.
அதேபோல் மாவட்ட நிர்வாகமும் மேல் நடவடிக்கை எடுக்கும் முன் அந்தப் பள்ளி மாணாக்கருக்கோ, பெற்றோர்களுக்கோ தெரிவித்திருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பள்ளிகள் வரும் கல்வியாண்டில் செயல்பட அனுமதி இல்லை என ஒரு விழிப்புணர்வு நோட்டீஸ் அல்லது ஆட்டோ மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். அதை மாவட்ட நிர்வாகம் செய்யத் தவறியதும் வருத்தத்திற்குரியது.
பள்ளிக்கு சீல் வைப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முன் கூட்டியே செய்திருக்க வேண்டாமா? பள்ளி திறப்புக்கு ஒரு நாள் முன்னதாகவா செய்ய வேண்டும்? என்னங்க, பாவங்க பசங்க, அதிகாரிகளின் அலட்சியப்போக்கிற்கு மாணவர்களின் எதிர்காலம் பலியாகலாமா என்றார் வேதனையுடன்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.