திராவிட மாடல் என்பது கார்ப்பரேட் மாடலே என்பதை கடந்த 3 ஆண்டுகால ஆட்சி மூலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இன்று (செப்.11) எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல்கள், கட்சியின் உட்கட்சி தேர்தல் நிலவரங்கள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது;
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை நசுக்கும் தீய நோக்கத்துடனுடம், வக்ஃப் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் எண்ணத்துடனும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளது.
வக்ஃப் சொத்துக்கள் பொதுச் சொத்துகள் அல்ல, அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு மத நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் சொத்துக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வக்ஃப் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது.
இயற்கையாகவே, வக்பு சொத்துக்களின் பாதுகாவலர்களாகவும், அதனை நிர்வகிக்கும் உரிமை உள்ளவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள். ஆனால், சர்ச்சைக்குரிய திருத்த மசோதா முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் சேர்க்க முன்மொழிகிறது. முன்மொழியப்பட்ட திருத்த மசோதாவில் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் மிக மோசமானவை. பாஜக அரசின் இந்த பிற்போக்கு நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிப்பதோடு முன்மொழியப்பட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது.
மேலும், அரசியலமைப்பிற்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையில் இருந்து அரசு பின்வாங்கி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது, என்றார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் பற்றி முபாரக் பேசுகையில், விளைநிலங்கள், குடியிருப்புகளை அழித்து திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை வழங்கியுள்ள ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் அருகே 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏகனாபுரத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 700 நாட்களைக் கடந்தும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. விவசாய நிலங்களை, குடியிருப்புகளை, நீர்நிலைகளை பாதுகாக்க, விமான நிலைய திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று கோரி, ஜனநாயக வழியில் தங்கள் உரிமைக்காக போராடும் மக்கள் மீது தொடர் அடக்குமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.
மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு நிலங்களைக் கையகப்படுத்தும் அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விளைநிலங்களை அழித்து, சொந்த மாநில மக்களை அவர்களது சொந்த ஊரிலிருந்து விரட்டியடித்து அவர்களைச் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்க எத்தனித்துவிட்ட திமுக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் என்பது கார்ப்பரேட் மாடலே என்பதை கடந்த 3 ஆண்டுகால ஆட்சி மூலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
எட்டு வழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் போன்ற கார்ப்பரேட் நலன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தங்களுக்கு வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்ட திமுக, அதே கார்ப்பரேட் வழியில் இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விளைநிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இன்றி கைப்பற்றி எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்த பிறகு அந்த வாக்குறுதியை தூக்கி எறிந்துள்ளது திமுக அரசு.
கார்ப்பரேட் நலன்புரி அரசாக மட்டுமே செயல்படும் ஒன்றிய அரசுக்கு சற்றும் குறைந்தவர்கள் நாங்களில்லை என்பதை சமூகநீதி மாடல், திராவிட மாடல் என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு நிரூபித்து வருகின்றது.
ஆகவே, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக செயல்படுத்தப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், என்று முபாரக் வலியுறுத்தினார்.
மேலும் முஸ்லிம்களுக்கு சமூக-பொருளாதார வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பையும், சம பங்கீட்டையும் மேம்படுத்தும் வகையில், முறையான இடஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்தியும், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை வாக்குறுதிபடி விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசு, விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் நவம்பர் 16 அன்று தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கானோர் அணிதிரளும் மாபெரும் பேரணியை நடத்த எஸ்டிபிஐ கட்சி திட்டமிட்டுள்ளது, என்று நெல்லை முபாரக் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.