திருச்சி மாவட்டம், முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பெரியசாமி கடந்த 13ஆம் தேதி மாலை தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
இதையடுத்து ஜெம்புநாதபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இறந்து போன பெரியசாமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு பெரியசாமி உடல் பிரேத பரிசோதனை செய்து உடல் தகனம் செய்யப்பட்டது.
![Seeman](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/sIPtN55S9FAv6APcR273.jpeg)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு பேரூர் கிராமத்திற்கு நேரில் சென்று பெரியசாமியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது; "திருச்செங்கோட்டில் மருத்துவர் ஒருவர் குழந்தையை விற்றச் சம்பவம் தமிழ்நாட்டையே வெட்கி தலை குனிய வைத்துள்ளது. மருத்துவர்கள் மீது எப்போதும் மதிப்பு மரியாதை உண்டு. ஆனாலும் மருத்துவ தர கட்டுப்பாட்டு மீது எனக்கு அதிகப்படியான விமர்சனம் உள்ளது. தண்ணீர், கல்வி, உயிர் காக்கும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குழந்தை விற்பனை வரை வந்து விட்டது. இது முற்றிலும் தவறான கண்டிக்கத்தக்க செயல்.
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இந்தியா தனது உரிமையை இழந்து வெகு நாளாகிவிட்டது.
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆகலாம். ஆனால் ஏதோ ஒரு மாநிலத்திற்கு முதல்வராக முடியுமா? தமிழ்நாட்டில் போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஆடை, சிகை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
ஆனால், வட மாநிலத்தவருக்கு அது போன்ற கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. தேர்வில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்படி இருந்தால் எவ்வாறு தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்? அந்தந்த மாநில மக்களுக்கு அந்தந்த மாநில தேர்வில், பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது, ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பப்பட்டது. ராமருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? இந்தியாவின் விடுதலைக்கு கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் போராடினர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் விடுதலைக்காக போராடவில்லை.
400 ஆண்டு காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் பாஜக-வினருக்கு நண்பர்களாக உள்ளனர். ஆனால் நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம்களை எதிரிகளாக பார்க்கின்றனர்.
மகளிர் உரிமை குறித்து பேசும் திமுக மகளிர் நலனுக்காக என்ன செய்திருக்கிறது? நாம் தமிழர் கட்சி பெண் உறுப்பினர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி. தேர்தல்களில் போட்டியிட சரி பாதி உரிமை கொடுத்துள்ளது. இது போன்ற திமுக செய்துள்ளதா?.
பெண்கள் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே, இவ்வளவு காலம் நடத்தாத மகளிர் மாநாட்டை திமுக தற்போது நடத்துகிறது. தமிழ்நாட்டில் இலவசம் என்ற சொல்லையே ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் வறுமை நிலை இல்லாத வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.
காவல்துறை பணியில் இருப்பவர்கள் பாலியல் போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார்களே தவிர்த்து, அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவதில்லை. பின்பு எப்படி குற்றச்சம்பவங்கள் குறையும். அதே தவறு மற்றொரு இடத்தில் தொடரத்தான் செய்யும். இதைக் காவலர்களின் குற்றமாக பார்க்கவில்லை. சமூகத்தின் குற்றமாக பார்க்கிறேன்.
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதில், இந்த தமிழ்நாடு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்பட மாட்டார்கள். அப்படி கைது செய்யப்பட்டால் நான் கையெழுத்து இட்டுவிட்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறுகிறேன். மற்ற மாநிலங்களில் மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் கைது செய்யப்படுகிறார்கள். அண்ணாமலையின் நடைப்பயணம் தற்போது எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. நடையோ நடை என்று நடக்கிறார், அதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" என காட்டமாக அவரது கருத்துக்களை பதிவு செய்தார்.
சீமான் பயணத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட திரளானோர் உடனிருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“