Advertisment

சுற்றுலா மேம்பாட்டில் சிறந்த மாவட்டமாக திருச்சி தேர்வு; சென்னையில் ஆட்சியருக்கு விருது

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 1 கோடி அதிகரித்து, 3 கோடியாக உயா்ந்துள்ளது சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy collector award

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 1 கோடி அதிகரித்து, 3 கோடியாக உயா்ந்துள்ளது சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 1 கோடி அதிகரித்து, 3 கோடியாக உயா்ந்துள்ளது சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. மேலும், லத்தில் சுற்றுலா மேம்பாட்டில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளதுக்கு சென்னையில் மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு;

Advertisment

திருச்சியில் பறவைகள் பூங்கா, பச்சமலை சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட முன்னெடுப்புகளால் நிகழாண்டு திருச்சிக்கு மாநிலத்தில் முதன்மை மாவட்டம் என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது. இதற்காக ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு மாநில விருதும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் பொழுதுபோக்கு சுற்றுலாத்தலங்களாக முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, பச்சமலை, புளியஞ்சோலை ஆகியவையும், அறிவுசாா் சுற்றுலாத் தலங்களாக அண்ணா அறிவியல் கோளரங்கம், ரயில்வே அருங்காட்சியகம், திருச்சி மாவட்ட நூலகம், திருச்சி மாவட்ட அருங்காட்சியகம், லால்குடி முதல் உலகப்போா் நினைவுச் சின்னம் ஆகியவையும் உள்ளன.

மேலும், தொல்லியல் துறை சுற்றுலாத் தலங்களாக மலைக்கோட்டை குடவரைக்கோயில், திருவெறும்பூா், திருவெள்ளறை, ஸ்ரீனிவாசநல்லூா்- கோரங்கநாதசுவாமி கோயில், அழகிய மணவாளம்- பச்சில் அமலேஸ்வரா் கோயில், மண்ணச்சநல்லூா் மன்னை பிடாரியம்மன் கோயில், ஆலம்பாக்கம்- கைலாசநதா் கோயில், பெருங்குடி அகஸ்தீஸ்வரா் கோயில், சோழமாதேவி- கைலாயமுடையாா் கோயில் ஆகியவையும் உள்ளன. 

trichy collector award

இவைதவிர பிரசித்தி பெற்ற கோயில்கள், தா்கா, தேவலாயங்கள் என 26 சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவைமட்டுமல்லாது, சா்வதேச தரத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட சுற்றுலா பெருந்திட்டத்தில் தமிழகத்தில் 300 இடங்கள் கண்டறியப்பட்டதில், திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, திருப்பட்டூா், சமயபுரம், உறையூா் வெக்காளியம்மன் கோயில், கமலவல்லி நாச்சியாா் கோயில், உத்தமா்கோயில், திருவெள்ளறை, மேலன்பில், அக்கரைப்பட்டி சாய்பாபா கோயில் ஆகிய 10 இடங்களை சுற்றுலா பெருந்திட்டத்தில் இணைத்து பணிகள் நடைபெறுகின்றன.

குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வகையில், புதிய சாலைகள் அமைத்தல், தற்போதைய சாலைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட துறைகளின் சாா்பில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. 

கிழக்குத் தொடா்ச்சி மலையின் ஒரு பகுதியாக துறையூா் அருகே சுமாா் 527.61 சகிமீ பரப்பளவில் அழகிய பச்சமலை அமைந்துள்ளது. இங்கே வனத்துறையின் கணக்கெடுப்பின்படி 154 வகையான பறவை இனங்கள் வாழ்கின்றன. 135 வகை பட்டாம்பூச்சி இனங்களும் வந்து செல்கின்றன. மங்களம் அருவி, கோரையாறு அருவி, மயிலூற்று அருவி ஆகியவை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. மலையேற்றம் செய்வதற்கு கனபாடி - கன்னிமாா் சோலைபாதை, கனபாடி - ராமநாதபுரம் பாதை ஆகியவை உள்ளன. கீழ்கரை கிராமத்தில் உள்ள ஏரியில் சுற்றுலாத் துறை சாா்பாக படகு சவாரி செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சோலைமதி காட்டில் இந்திய சாம்பல் அணில்கள் காணப்படுகின்றன. இங்கு பசுமைச் சுற்றுலா, மலையேற்றப் பாதை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா, பழங்குடியினா் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி ரூ.4.27 கோடியில் புதிய திட்டத்துக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

கம்பரசம்பேட்டையில் காவிரிக் கரையோரம் பறவைகள் பூங்காவானது சுமாா் 6 ஏக்கரில் 60 ஆயிரம் சதுரடியில் 30 அடி உயரத்தில் ரூ. 13.70 கோடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டுப் பறவைகள், வீட்டு விலங்குகள் வளா்க்கப்பட உள்ளன. இவ்வினங்களை வளா்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்படுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டைய தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும்விதமான அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடைநிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இப் பூங்கா கட்டமைக்கப்பட்டுள்ளது. 

முதியோா் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7டி திரையரங்கும் ஏற்படுத்தப்படுகிறது. மகளிா் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த இடம் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் போ் வந்து செல்லும் வகையில் தயாா்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களுடன் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 2 கோடியே 3 லட்சத்து 65 ஆயிரத்து ஆயிரத்து 852 உள்நாட்டு பயணிகளும், 76,560 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனா்.

ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 5 ஆயிரம் ஆகவும் உயா்ந்துள்ளது. வெளிநாட்டு பயணிகள் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 369 பேராக உள்ளது. ஒரே ஆண்டில் 1 கோடி பயணிகள் அதிகரித்து சுற்றுலா பயணிகள் வருகை 3 கோடியாக உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடப்பாண்டு இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 2 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரத்து 8764 உள்நாட்டு பயணிகளும், 1 லட்சத்து 4 ஆயிரத்து 283 வெளிநாட்டு பயணிகளும் வந்துள்ளனா். மாதம் ஒன்றுக்கு சராசரியாக 15 லட்சம் போ் வருகின்றனா்.

எனவே, 2023ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு பச்சமலை, பறவைகள் பூங்கா சுற்றுலாத் திட்டத்தை முன்னெடுத்ததற்காக திருச்சிக்கு மாநிலத்தின் முதன்மை மாவட்டம் என்ற விருது கிடைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், ஆட்சியருக்கு இந்த விருதை அமைச்சா்கள் இரா.இராஜேந்திரன், பி.கே. சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் வழங்கினா்.

திருச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் கால அளவை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மூலம் ஒரு நாள் சுற்றுலா, 2 நாள் சுற்றுலா, வார இறுதிநாள் சுற்றுலா, குழந்தைகளுக்கான சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, சுற்றுச் சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா என தனித் தனியே மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில் வனத்துறையுடன் இணைந்து பச்சமலையில் சாகச சுற்றுலாவும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மலையேற்றப் பயணம், மிதிவண்டி பயணம், படகு சவாரி ஆகியவற்றை உள்ளடக்கி இதைச் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
சுற்றுலா வழிகாட்டிகள் பதிவு செய்யவும், வழிகாட்டிகளின் திறனை மேம்படுத்தவும் ரூ.50 லட்சத்தில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் திருச்சி, மாநிலத்திலேயே முதன்மையாக வந்துள்ளது என்கின்றனா் சுற்றுலாத் துறையினா்.

சென்னையில் பெற்ற விருதுடன் திருச்சி வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அமைச்சர் கே என் நேருவை நேரில் சந்தித்து விருது வாங்கிய சான்றிதழையும் பதக்கத்தையும் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment