திருச்சி தினமலர் நாளிதழில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தியாளராக, தலைமை செய்தியாளராக, செய்தி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.எம். கோவிந்தசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் காலமானார். ராமநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட கோவிந்தசாமி திருச்சி தினமலர் பதிப்பில் பணிக்கு இணைந்தவுடன் முழுமூச்சாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேர்மையும், அறமும் இம்மியளவும் தவறாமல் பத்திரிகை உலகில் கோலோச்சி, பத்திரிகை பணியை உயிர் மூச்சாகக் கொண்ட கோவிந்தசாமி, விவசாயிகள் பிரச்னை, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஏராளமான செய்திக் கட்டுரைகளை எழுதி, அந்தப் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றுக்கு தீர்வு காண முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்.
வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு நடந்தே சென்று செய்திகளை சேகரித்து 'சின்ன மருது' என்ற புனைப்பெயரில், விடுதலைப் புலிகளின் நடமாட்டம் குறித்து துணிச்சலாக செய்திகளை வெளியிட்டவர்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் நெருங்கிப் பழகி, அரசுக்கும் மக்களுக்கும் பத்திரிகை மூலமாக பாலமாக விளங்கியவர். எண்ணற்ற பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவருடைய இழப்பு பத்திரிகை துறைக்கு பேரிழப்பாகும்.
கோவிந்தசாமியின் மறைவுக்கு தி.மு.க முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு சார்பிலும், திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், திருச்சி பிரஸ் கிளப் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பிலும் இன்று மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது கோவிந்தசாமியின் பூதஉடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கும் இரங்கலும், அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“