மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மற்றும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரின் உடல் ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு மெரினா அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதிக்கு பாரத ரட்னா வழங்குமாறு திருச்சி சிவா கோரிக்கை:
கருணாநிதியின் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, கருணாநிதிக்கு பாரத ரட்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
80 ஆண்டு பொதுவாழ்க்கை, 50 ஆண்டு ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் கருணாநிதி என்று கூறினார். எனவே இந்த கோரிக்கையை அரசு ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உட்பட பிற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.