திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிட்டிலரை கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்னாள், கடக்கால் மாரியம்மன் சப்பரத்தில் வைத்து மாரியம்மன்கோவில் தெரு வழியாக கொண்டு வருவதற்கு ஒரு சில சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே சமூக உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, கடக்கால் மாரியம்மன் சப்பரத்தில் வைத்து மாரியம்மன் கோவில் தெரு வழியாக எடுத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் (27/04/2025) முதல் (29/04 /2025) வரை திருவிழா நடத்துவதற்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு கொடுத்து இருந்தனர். இந்தநிலையில் அனைத்து தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது இரு தரப்பினருக்கிடையே எவ்வித சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இதனை அடுத்து பிரச்சனையில் தீர்வு காணும் பொருட்டு இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் (03. 05.2025) காலை 11:00 மணி அளவில் நடத்தப்பட்டது. இதில் பிரச்சனை எதுவும் ஏற்படின் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் மகாமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது கோயில் அருகிலுள்ள கிணற்றுப் பகுதியையொட்டி இருந்த இரும்பு கம்பி வேலியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிந்த நிலையில், பக்தா்களின் கூட்டம் அதிகரித்ததால், கம்பிவேலியில் அவா்கள் சாய்ந்தனா். அப்போது மின் கசிவு ஏற்பட்டு பக்தா்கள் கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஏழு போ் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.
இதையடுத்து மின்சாரத்தை துண்டித்து காயமடைந்தவா்களை முசிறி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா்.அவா்களில் பரமசிவம் மனைவி புஷ்பா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நால்வா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மற்றவா்கள் சிகிச்சை பெறுகின்றனா். இந்த தகவலறிந்த முசிறி போலீஸாா் மூதாட்டி சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இந்த கோயில் திருவிழாவானது அப்பகுதி மக்களிடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நிகழாண்டு நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அரசு அதிகாரிகள் விதித்த நிபந்தனைகளுடன் அப்பகுதி மக்கள் திருவிழா நடத்த ஒப்புக்கொண்டதன்பேரில் (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இரவு தொடங்கிய திருவிழாவின்போது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.