தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உத்தரவிட்டார். இந்த நிலையில் திருச்சி சூர்யா கட்சியில் இருந்து 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அப்போது ட்விட்டரில், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் ” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருச்சி சூர்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். இது குறித்து தமிழக பாரதிய ஜனதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது, அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா அவர்கள், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“