திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்ட புதிய டென்னிஸ் விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை காலை வருகை தந்தார்.
இந்த திறப்பு விழா அழைப்பிதழ் மற்றும் பேனர்களில், திருச்சி சிவா எம்.பி. பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அமைச்சர் கேஎன் நேரு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து விட்டு காரில் திரும்ப சென்றார். அப்போது அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர், திடீரென காரில் இருந்து இறங்கி திருச்சி சிவா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் காவல்துறையில் சரணடைந்தனர். இவர்கள் நான்கு பேரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பகரைனில் ஒரு கருத்தரங்கு நிகழ்வை முடித்துக் கொண்டு இன்று நண்பகல் திருச்சிக்கு விமான மூலம் வந்த திருச்சி சிவா எம்.பி., நேருவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தமது வீட்டையும் வாகனத்தையும் கண்டு வேதனைப்பட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் தனி நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரேன் சென்று இருந்தேன்.
என் வீட்டில் நடந்த தாக்குதல் குறித்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை, கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை.
நான் அடிப்படையில் முழுமையான, அழுத்தமான திமுக கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான். இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி மற்றும் எனது நண்பர்கள் வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் காயப்பட்டு உள்ளனர். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது, ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை.
மன சோர்வில் உள்ளேன். இந்த தாக்குதல் சம்பவம் எனக்கு பெரும் வேதனையை தந்துள்ளது, பிறகு முழு விபரமாக உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“