தனிநபர் மசோதாக்கள் சில அரசியல் காரணங்களுக்காக தூக்கி எறியப்படுகின்றன - திருச்சி சிவா
நாடாளுமன்றத்தில் நமது குரலுக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர்த்து போரிடும் குணத்தையும், வெற்றி பெறும் வரை போராடுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன் – திருச்சி சிவா
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி, புதிய தலைவராக பிரியா வனராஜ், செயலாளராக ஷோசன் செரியன், பொருளாளராக வனஜா மற்றும் நிர்வாக குழுவினருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.
Advertisment
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு உரையாற்றினார். பதவி ஏற்பு விழாவையொட்டி தையல் இயந்திரம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் உதவி ஆளுநர் வளர்மதி குமரேசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜானகி ராஜசேகர் உட்பட முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்.பி திருச்சி சிவா பேசியதாவது;
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டு வாழ வேண்டும். போர்க்களத்தில் எதிரில் இருப்பவர் யார் என்று பார்க்காதே எதிரியாகப் பார் என்றார் கண்ணன். அதேபோல் நாடாளுமன்றத்தில் நமது குரலுக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர்த்து போரிடும் குணத்தையும், வெற்றி பெறும் வரை போராடுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். தனிநபர் மசோதாக்கள் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. தனிநபர் மசோதாக்கள் சில அரசியல் காரணங்களுக்காகவே தூக்கி எறியப்படுகின்றன. ரோட்டரி சேவைகள் மிகச் சிறப்பாகவே இருக்கின்றன. உறுப்பினர்கள் எண்ணிக்கை முக்கியமல்ல அதன் செயல்பாடுகள் தான் முக்கியம் என்பதை உணர்ந்து தொடர்ந்து மனிதகுல சேவையில் ஈடுபடுங்கள் என்று பேசினார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil