/indian-express-tamil/media/media_files/2025/05/08/WgJXLzBVqwCorkionhCZ.jpg)
திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு அவரது சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் மாபெரும் நடிகராக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க 2009 ஆம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் 2011 ஆம் ஆண்டு 9 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சிவாஜியின் சிலை திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக அது அரசால் திறந்து வைக்கப்படாமல் இருந்தது. எனவே, உடனடியாக சிவாஜி சிலையை திறந்து வைக்க வேண்டும் என சிவாஜியின் குடும்பத்தினர், ரசிகர்கள், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, வேறு இடத்தில் பூங்காவில் சிவாஜி சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும் என பதிலளித்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி பாலக்கரை பகுதியில் சிலையை நிறுவி திறந்து வைப்பதில் சில சிக்கல்கள் நேரிட்டன. அதன்படி, சிவாஜி சிலை வார்னர்ஸ் சாலையில் உள்ள மினி பூங்காவில் மாற்றப்பட்டு நிறுவப்பட்டது. ஆனால் பொது இடங்களில் சிலை நிறுவக்கூடாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் சிலை திறப்பு விழா தள்ளிப் போனது.
இதையடுத்து புத்தூர் பகுதியில் தனியார் இடத்தில் சிவாஜி சிலை கொண்டு செல்லப்பட்டு சில நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு சிவாஜி சிலை தனியார் இடத்தில் நிறுவப்படுவது குறித்து தனி தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பஞ்சப்பூர் புதிய பேருந்து முனைய திறப்பு விழாவிற்காக வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை புத்தூரில் நிறுவப்பட்டிருந்த சிவாஜி சிலையை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு மற்றும் அவரது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, "எங்களுக்கு இன்று மிகவும் சந்தோஷமான நாளாகும். என் தந்தை இளம் வயதில் திருச்சியில் வசித்து வந்தார். என் தந்தையுடன் மாட்டு வண்டியில் தெருத்தெருவாக சுற்றிய இந்த திருச்சியில் அவருக்கு சிலை நிறுவி இருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இங்கு அவருக்கு சிலை வைத்ததன் மூலம் அவரது ஆத்மா சாந்தியடையும்.
என்னுடைய தாத்தா திருச்சியில் ரயில்வேயில் பணியாற்றியதால் சிறு வயதில் நாங்கள் அனைவரும் இங்கு தான் வளர்ந்தோம்.
அதனால் திருச்சிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சிவாஜிக்கு முதலில் சிலை நிறுவியது அமைச்சர் கே.என்.நேரு தான். என் தந்தை மீது எப்போதுமே மிகுந்த பிரியத்துடன் இருக்கும் அவரது தீவிர ரசிகரான முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிலை அமைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்,"என்றார்.
சிவாஜி சிலையைத் திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.