/indian-express-tamil/media/media_files/2025/04/30/TBOtMpskNaWzCnNYt86x.jpg)
Trichy Sivaji statue
14 ஆண்டுகளுக்குப் பிறகு சாக்குப்பையில் அடைக்கப்பட்டிருந்த செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு விடுதலை கிடைத்துள்ளது.
திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 2011-ம் ஆண்டு 9 அடி உயர நடிகர் திலகம் சிவாஜியின் சிலை நிறுவப்பட்டது. இந்தப்பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் அந்தப்பகுதியில் வைத்த சிலையை அகற்றுமாறும் சர்ச்சைகள் எழுந்தது. அதேபோல், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியும் கிடைக்காததால், சிவாஜி சிலை திறக்கப்படாமல் சாக்குப்பையால் மூடப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.
இந்நிலையில், சிவாஜி சிலையை திறக்கக்கோரி, திருச்சியைச் சேர்ந்த சிவாஜி ரசிகர் மன்ற உறுப்பினர் மோகன் பாலாஜி என்பவர், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொது இடங்களில் தலைவர்கள் சிலை அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே உள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், சிவாஜி சிலையை முக்கியத்துவம் வாய்ந்த வேறு இடத்தில் நிறுவ அறிவுறுத்தியது. இதனால் வெயில், மழை என்று கடந்த 14 ஆண்டுகளாக சிவாஜி சிலை சாக்கு பைகளால் கட்டப்பட்டு திறக்கப்படாமலேயே இருந்தது.
இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன் தொடா்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலையை இடமாற்றம் செய்வதற்காக திருச்சியில் இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றதில், சோனா மீனா தியேட்டர் எதிரே உள்ள வார்னர்ஸ் சாலையில் உள்ள ரவுண்டானாவில் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது
இதற்கான பணிகளும் நேற்று தொடங்கின. மேலும், இந்த சிலையை மே 9-ம் தேதி பஞ்சப்பூா் பேருந்து நிலைய திறப்பு விழாவின்போது முதல்வா் இந்த சிலையை திறந்து வைக்கவுள்ளார் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்காக திருச்சி மாநகராட்சி கூட்டத்திலும் அதிகாரப்பூா்வமாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பியதுபோல் தற்போது சிவாஜி சிலை 14 ஆண்டுகளுக்கு பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வார்னர்ஸ் சாலையில் உள்ள பூங்காவில் சிலை நிறுவும் பணிக்கான பீடம் உள்ளிட்ட பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
முன்னதாக, மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த 2009 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வெண்கலச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திருச்சி பாலக்கரை பிரதான சாலையில் பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயரத்தில் முழு உருவவெண்கலச் சிலை நிறுவப்பட்டது. பணிகள் முடிந்து 2011-இல் சிலை திறக்கும் தருணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிலை அமைக்க மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும் ஆட்சி மாற்றத்தால் சிலை திறப்பு கிடப்பில்போனது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.